கோலாலம்பூர்: ‘1எம்டிபி’ எனப்படும் மலேசிய மேம்பாட்டுக் கழகம் குறித்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், மூட்டு வலிக் காரணமாக கோலாலம்பூர் மருத்துவமனையில் செப்டம்பர் 9ஆம் தேதி (திங்கட்கிழமை) அனுமதிக்கப்பட்டார்.
நஜிப்பிற்கு வலது முழங்காலில் கடுமையான வலி ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சிறைத்துறை அவரை தன்னிடம் சிகிச்சைக்காகப் பரிந்துரைத்ததாகக் கோலாலம்பூர் மருத்துவமனையின் மூத்த எலும்பியல் ஆலோசகர் சித்தி ஹவா தாஹிர், மலேசிய உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
71 வயதான நஜிப்பிற்கு இரண்டு நாள் மருத்துவ விடுப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும் அவரது வலியைப் போக்க வலுவான வலி நிவாரணி கொடுக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் திருவாட்டி சித்தி கூறினார்.
மேலும், “நஜிப்பிற்கு ‘ஓபியாய்டு’ மருந்தைச் செப்டம்பர் 9 ஆம் தேதி இரவு நான் பரிந்துரைத்தேன். இதனால், அவருக்கு மயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டது,” என அவர் சொன்னார்.
நஜிப்பின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக நீதிபதி தெரிவித்தார்.