50 மில்லியன் ரிங்கிட் அபராதத் தொகையை அம்னோ செலுத்தியதை அடுத்து நஜிப்பை வீட்டுக் காவலில் வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

50 மில்லியன் ரிங்கிட் அபராதத் தொகையை அம்னோ செலுத்தியதை அடுத்து நஜிப்பை வீட்டுக் காவலில் வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

படம்: ராய்ட்டர்ஸ்

06 Nov 2026 - 2:49 pm

2 mins read

கோலாலம்பூர்: ‘எஸ்ஆர்சி இன்டர்நேஷனல்’ வழக்கில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது விதிக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட் (S$15.7 மில்லியன்) அபராதம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர் வீட்டுக் காவலில் இருக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நஜிப்பின் சட்டக் குழுவைச் சேர்ந்த முஹம்மது ஃபர்ஹான் முஹம்மது ஷாஃபி, இந்தத் தொகையை அம்னோ கட்சி வெள்ளிக்கிழமை காலை உயர் நீதிமன்றப் பதிவகத்தில் செலுத்தியதாக ‘தி ஸ்டார்’ ஊடகம் தெரிவித்தது.

“இன்று காலை நிலவரப்படி, நஜிப் செலுத்த வேண்டிய 50 மில்லியன் ரிங்கிட் அபராதத் தொகையை அம்னோ கட்சி உயர் நீதிமன்றத்தில் செலுத்திவிட்டது,” என்று அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

“இதன் விளைவாக, அரச மன்னிப்பின் அடிப்படையில், அவர் வீட்டுக் காவலில் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.”

முன்னாள் பிரதமரை வீட்டுக் காவலில் வைப்பதற்கான உத்தரவைச் சட்டக் குழு பெற்றுள்ளதாகவும், அதை காஜாங் சிறைக்குக் கொண்டு சென்று ஒப்படைக்க உள்ளதாகவும் ஃபர்ஹான் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்னதாக இன்னும் சில நடைமுறைகள் பூர்த்தியாக வேண்டியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

‘நஜிப் ரசாக் ஒற்றுமை நிதி’ என்ற சிறப்புக் கணக்கு அதிகாரபூர்வமாக மூடப்பட்டதாக அம்னோ கட்சி வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) அறிவித்துள்ளது. இலக்குக்கு ஏற்பவும், போதுமான அளவிலும் பொதுமக்களிடமிருந்து நன்கொடைகள் பெறப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அம்னோ தலைமைச் செயலாளர் டாக்டர் அஷ்ரஃப் வஜ்தி துசுகி, “கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டிய முழுத் தொகையையும் இன்று காலை கட்சி செலுத்திவிட்டது,” என்று தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு உதவும் நோக்கில், பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டும் முயற்சியாக இந்த நிதித் திட்டம் செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கப்பட்டது என்று அவர் விளக்கினார்.

நஜிப்பின் சிறப்பு அதிகாரியான அகமது லுத்பி அசார், அபராதத் தொகையைச் செலுத்துவதற்கும், இந்த நடவடிக்கையை நிறைவு செய்வதற்குத் தேவையான நிர்வாக நடைமுறைகளை மேற்கொள்வதற்கும் வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு நீதிமன்றத்திற்கு வருகை தந்தார்.

இந்தத் தொகையைச் செலுத்துவது, மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், செப்டம்பர் 18ஆம் தேதி வழங்கிய நிபந்தனைக்குட்பட்ட மன்னிப்பின் விதிமுறைகளில் ஒன்றாகும். இந்த மன்னிப்பின்படி, நஜிப் தமது எஞ்சிய சிறைத்தண்டனையை 2028 ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை வீட்டுக் காவலில் இருந்து கழிக்க அனுமதிக்கப்படுகிறார்.

குறிப்புச் சொற்கள்
தலைமைச் செயலாளர்நஜிப் ரசாக்முறைகேடு