கோலாலம்பூர்: கடுமையான வீட்டுக்காவல் நிபந்தனைகளின்கீழ், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்குடன் அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே ஒரே வீட்டில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அவர் தனிப்பட்ட கைப்பேசிகளைப் பயன்படுத்தவும் சமூக ஊடகங்களில் தோன்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமையன்று (நவம்பர் 12) நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அமைச்சர்களின் கேள்வி நேரத்தின்போது பேசிய மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில், நஜிப்பின் இருப்பிடம், நடமாட்டம், தகவல் தொடர்புகள் ஆகியவை குறித்து மன்னிப்பு வாரியம் விதித்துள்ள குறிப்பிட்ட விதிமுறைகளை விவரித்தார்.
இருப்பிடக் கட்டுப்பாடுகளின்படி, நெருங்கிய குடும்பத்தினர் என்பது நஜிப்பின் மனைவி, பிள்ளைகள், மருமகன்கள், மருமகள்கள், பேரப்பிள்ளைகள் எனத் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்த நெருங்கிய வட்டத்திற்கு வெளியே உள்ள எவரும் எழுத்துபூர்வ அனுமதியின்றி அங்கு தங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், நஜிப் வேறொரு வீட்டிற்கோ, கட்டடத்திற்கோ அல்லது வளாகத்திற்கோ இடம்பெயர்வதற்குக் கடுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் எழுத்துபூர்வ அனுமதியின்றி வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்துகொள்வது உட்பட எந்தவொரு காரணத்திற்காகவும் பதிவு செய்யப்பட்ட முகவரியைவிட்டு வெளியேற முடியாது என்றும் அவர் கூறினார்.
வீட்டுக்காவல் நிபந்தனைகளில் எதையேனும் நஜிப் மீறினால் அவர் மீண்டும் சிறைக்குத் திருப்பி அனுப்பப்படுவார் என்று அமைச்சர் சைஃபுதீன் தெரிவித்தார்.
நஜிப்பின் வீட்டுக்காவலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளால் அரசாங்கத்துக்கு எவ்விதக் கூடுதல் செலவினமும் ஏற்படவில்லை என்றும் ஏற்கெனவே பணியில் உள்ள அதிகாரிகள் மட்டுமே அப்பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே, நஜிப்பின் ஓய்வூதியம் தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை அமைச்சர் சைஃபுதீன் உறுதிப்படுத்தியுள்ளார்.
“ஒரு முன்னாள் பிரதமர் என்ற முறையில், அவரது சலுகைகள் கூட்டரசு அரசியலமைப்பு, அமைச்சரவைச் சுற்றறிக்கை ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் (ஊதியம்) சட்டமும் உள்ளது. தற்போதைக்கு அவரது ஓய்வூதிய வழங்குதொகை மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வேறு ஏதேனும் முடிவு எடுக்கப்படாத வரையில் அவர் ஏனைய சலுகைகளை அனுபவிக்க முடியும் என்பதே எனது புரிதல்,,” என்று அமைச்சர் சைஃபுதீன் தெரிவித்தார்.
