கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் தாமான் டுட்டா இல்லம், சட்டபூர்வ தடுப்புக்காவலில் உள்ள நபர்களின் சிறைவாசத்துக்கு உகந்த இடமாக அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில், 1995ஆம் ஆண்டு சிறைச்சாலைச் சட்டத்தின் [சட்டம் 537] பிரிவு 3இன் கீழ் அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) வெளியிடப்பட்ட கூட்டரசு அரசிதழில் அதற்கான அதிகாரபூர்வ ஆவணம் இடம்பெற்றுள்ளது.
அந்த அரசிதழின்படி, எண் 11, ஜாலான் லங்காக் டுட்டா முகவரியிலுள்ள கட்டடங்கள், 4,558.975 சதுர மீட்டர் பரப்பளவிலான நிலப்பகுதி ஆகியவை அறிவிக்கப்பட்ட பகுதிகளில் அடங்கும்.
‘எஸ்ஆர்சி இண்டர்நேஷனல்’ நிறுவன நிதி முறைகேடு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை, நஜிப் நவம்பர் 6ஆம் தேதி உயர் நீதிமன்றக் குற்றவியல் பதிவகத்தில் செலுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி மாமன்னர் நிபந்தனையுடன்கூடிய பொதுமன்னிப்பை நஜிப்புக்கு வழங்கினார். அந்த அபராதத் தொகையைச் செலுத்துவது அவற்றில் ஒன்று. அதன் மூலம், நஜிப் அவரது எஞ்சிய சிறைத்தண்டனைக் காலத்தை 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதிவரை வீட்டுக்காவலில் கழிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
