தேசியப் பாதுகாப்புப் படையினர் மெம்ஃபிசுக்கு அனுப்பப்படுவர்: டிரம்ப்

1 mins read
265afd87-a705-4e4d-8cb1-98f3270efb79
செப்டம்பர் 11ஆம் தேதி நியூயார்க்கிற்குச் செல்லும் முன்னர் வா‌ஷிங்டனில் செய்தியாளர்களுக்குக் கையசைத்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். - படம்: ராய்ட்டர்ஸ்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், டென்னசி மாநிலத்தின் மெம்ஃபிஸ் நகருக்கு தேசிய பாதுகாப்புப் படையினரை அனுப்பப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

குற்றச்செயல்களைக் குறைக்கும் நோக்கத்துடன் அவ்வாறு செய்யவிருப்பதாகத் திரு டிரம்ப் சொன்னார்.

அவரின் நிர்வாகம் சென்ற மாதம் (ஆகஸ்ட் 2025) வா‌ஷிங்டனில் காவல்துறையை அதன் கட்டுக்குள் கொண்டுவந்தது.

“மெம்ஃபிசுக்குச் செல்கிறோம். அங்கு நிறையப் பிரச்சினைகள் உள்ளன. வா‌ஷிங்டனைப் போன்றே அங்கும் நாங்கள் நடவடிக்கைகளை எடுக்கப்போகிறோம்,” என்று திரு டிரம்ப் சொன்னார்.

லூயிஸியானா மாநிலத்தின் நூ ஆர்லென்ஸ் உள்ளிட்ட மற்ற நகரங்களுக்கும் பாதுகாப்புப் படையினர் அனுப்பிவைக்கப்படுவர் என்று அவர் கூறினார்.

வா‌ஷிங்டன் போன்ற அமெரிக்க நகரங்களைக் குற்றச்செயல்கள் பாதிப்பதாகத் திரு டிரம்ப் குறிப்பிட்டார்.

ஆனால் நீதித் துறை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் வா‌ஷிங்டனில் சென்ற ஆண்டு குற்றச்செயல்களின் விகிதம் 30 ஆண்டுகள் இல்லாத அளவுக்குக் குறைந்ததாகக் கூறுகின்றன.

குறிப்புச் சொற்கள்