வாஷிங்டன்: அமெரிக்காவின் சிக்காகோ, லாஸ் ஏஞ்சலிஸ், போர்ட்லேண்ட் நகரங்களிலிருந்து தேசியப் பாதுகாப்புப் படையினரை மீட்டுக்கொள்வதாக அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.
குற்றச்செயல்கள் அதிகரித்தால் மீண்டும் மத்திய படையினர் அங்குச் செல்வர் என்றும் அவர் சொன்னார். புதன்கிழமை (டிசம்பர் 31) சமூக ஊடகத்தில் அந்தத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் திரு டிரம்ப்.
அந்நகரங்களின் உள்ளூர்த் தலைவர்களும் ஜனநாயகக் கட்சியினரும் படையினரை அனுப்பியது தேவையற்ற செயல் என்று கூறினர். பெரும்பாலும் அமைதியான முறையில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களை வன்முறையைப் போன்று பெரிதுபடுத்திக் காட்டுவதாக அவர்கள் டிரம்ப் நிர்வாகத்தைக் குறைகூறினர்.
சிக்காகோ, லாஸ் ஏஞ்சலிஸ், போர்ட்லேண்ட், வாஷிங்டன், மெம்ஃபிஸ் ஆகிய நகரங்களுக்குப் படையினரை அனுப்பியதைத் தற்காத்துப் பேசினார் அமெரிக்க அதிபர். குற்றச்செயல்களைக் குறைக்க அது அவசியமான நடவடிக்கை என்றார் அவர். மத்திய அரசாங்கத்தின் சொத்துகளையும் அதிகாரிகளையும் ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து பாதுகாக்க அத்தகைய நடவடிக்கையை எடுப்பது முக்கியம் என்று திரு டிரம்ப் குறிப்பிட்டார்.
குற்றச்செயல்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாலேயே இப்போது படையினரை மீட்கும் முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
“குற்றச்செயல்கள் கூடினால் மீண்டும் வருவோம். ஆனால் அது வேறு விதமாக வலுவாக இருக்கும். எப்போது என்பதுதான் கேள்வி!,” என்று அமெரிக்க அதிபர் கூறினார்.
படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சம்பந்தப்பட்ட நகரங்கள் வழக்குத் தொடுத்திருந்தன. டிரம்ப் நிர்வாகம், அதன் அதிகாரத்தை மீறி நடவடிக்கை எடுத்திருப்பதாக வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் தொடர்ந்து கூறிவருகின்றனர். மத்திய அரசாங்கத்தின் சொத்துகளைப் பாதுகாக்கப் படையினர் தேவை என்பதற்கு ஆதரவாக எந்தச் சான்றும் இல்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
அமெரிக்காவின் கடும் குடிநுழைவுக் கொள்கைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு இடையில் அதிபர் டோனல்ட் டிரம்ப், கடந்த ஆண்டு (2025) ஜூனில் சில நகரங்களுக்குப் படையினரை அனுப்பத் தொடங்கினார். முறையான ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினரைத் தாயகத்திற்கு அனுப்பும் நடவடிக்கையையும் அவர் முடுக்கிவிட்டார்.

