ஹாங்காங்: ஹாங்காங்கின் தேசியப் பாதுகாப்புக் குறித்துச் சீனா, கொள்கை அறிக்கையொன்றைச் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 10) வெளியிட்டுள்ளது.
ஹாங்காங்கில் தேசியப் பாதுகாப்பு விவகாரங்களைப் பொறுத்தவரை, பெய்ஜிங்கிற்கு அடிப்படைப் பொறுப்பு இருப்பதாகச் சீனா வலியுறுத்தியது.
சீனாவை விமர்சிப்பவரும் முன்னாள் ஊடகச் செல்வந்தருமான ஜிம்மி லாய்க்கு, வெளிநாட்டுச் சதி தொடர்பான வழக்கில் திங்கட்கிழமை, நகரின் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 20 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாள் சீனாவின் அமைச்சரவை அறிக்கையை வெளியிட்டது.
சீனா நடைமுறைப்படுத்திய சட்டத்தின்கீழ் லாய்க்கு விதிக்கப்பட்ட தண்டனை, ஆகக் கடுமையானதாகக் கருதப்படுகிறது. அது அனைத்துலக அளவில் கடும் குறைகூறலுக்கு உள்ளானது. அமெரிக்கா, பிரிட்டன், தைவான், ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், மனித உரிமைக் குழுக்கள் முதலியவை அதனைச் சாடின.
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மனித உரிமைப் பிரிவுத் தலைவர் வோல்கர் டுர்க், 78 வயது லாய்க்கு எதிரான தண்டனையைக் கடுமையாகக் கண்டித்தார். அனைத்துலகச் சட்டத்துடன் அது பொருந்திப் போகவில்லை என்றார் அவர்.
ஹாங்காங், தேசியப் பாதுகாப்பைக் கட்டிக்காக்க அதன் சட்டத்துறைக் கட்டமைப்பைத் தொடர்ந்து மேம்படுத்தும் என்று வெள்ளை அறிக்கை குறிப்பிட்டது.
ஹாங்காங் தலைவர் ஜான் லீ, வெள்ளை அறிக்கையை வரவேற்றார். தேசியப் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்கும் நடவடிக்கைகளைக் கையாள அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
கருத்து வேறுபாடுகளையும் ஜனநாயக ஆதரவுக் குரல்களையும் ஒடுக்குவதற்கு தேசியப் பாதுகாப்புச் சட்டம் பயன்படுத்தப்படுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

