ஆகத் தூய்மையான இந்திய நகரமாக மகாராஷ்டிராவின் நவிமும்பாய் தேர்வு

ஆகத் தூய்மையான இந்திய நகரமாக மகாராஷ்டிராவின் நவிமும்பாய் தேர்வு

படம்: த நியூ இந்தியடன எக்ஸ்பிரஸ்

12 Nov 2026 - 5:08 pm

2 mins read

புதுடெல்லி: இந்தியாவின் ஆகத் தூய்மையான நகரமாக மகாராஷ்டிராவின் நவிமும்பை தேர்வு செய்யப்பட்டது. ‘சுவாட்ச் சர்வேக்ஷன்’ என்று ஹிந்தியில் அழைக்கப்படும் மத்திய அரசு நடத்தும் தூய்மைக்கான ஆய்வில் அந்நகரம் முதலிடத்தைப் பெற்றது.

2025முதல் 2026ஆம் ஆண்டுக்கான ஆகத் தூய்மைக்கான ஆய்வில் முதலிடம் பெற்ற நகருக்கான விருதை இந்திய அதிபர் திரௌபதி முர்மு, நவி மும்பை நகரின் பிரதிநிதியிடம் வழங்கி சிறப்பித்தார்.

அந்நிகழ்வு புதன்கிழமை (நவம்பர் 11) புதுடெல்லியில் உள்ள விக்யான் பவன் மாநாட்டு மண்டபத்தில் நடந்தது. குஜராத்தின் சூரத் நகர் இரண்டாம் இடத்திலும் ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடா மூன்றாம் நிலையிலும் அப்பட்டியலில் இடம்பெற்றன.

அதே ஆய்வில் மத்தியப் பிரதேசத்தின் ரேவா ஆகத் தூய்மையான ஆற்றங்கரை நகராகத் தேர்வுசெய்யப்பட்டது. ஹிமாலய மலைத்தொடரில் உத்தராகண்டின் ருத்ராபூர் ஆகத் தூய்மையான மலைப்பகுதியாக தகுதிபெற்றது.

ஒரு மில்லியன் மக்கள்தொகையுள்ள பிரிவில், விசாகப்பட்டின பெருநகர் மிகத் தூய்மையான நகராக பட்டியலில் இடம்பிடித்தது. மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர், உத்தரப் பிரதேசத்தின் லக்னவ் ஆகிய நகர்கள் அப்பிரிவில் இரண்டாம், மூன்றாம் நிலையில் வந்தன.

மூன்று லட்சம் முதல் ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கான பிரிவில், மத்தியப் பிரதேசத்தின் மேற்கில் உள்ள உஜ்ஜயின் மிகத் தூய்மையான நகர் என்று தேர்வு பெற்றது. இரண்டாம் நிலையில் பஞ்சாபுக்கும் ஹரியானாவுக்கும் இடையில் உள்ள சண்டிகர் வந்தது. மூன்றாவது இடத்தை ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் பிடித்தது.

இதுவரை எட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்த இந்தூர் இம்முறை வேறு பிரிவில் மதிப்பிடப்பட்டது. தூய்மையில் இரட்டை முன்மாதிரி நகரங்களுக்கான பிரிவில் இந்தூர் இரண்டாம் நிலையில் வந்தது. அதன் ஜோடி நகராக தேபல்பூர் தேர்வு செய்யப்பட்டது.

புறநகர்களின் தூய்மைத் தரத்தை மேம்படுத்தும் இலக்குடன் இந்த நாடுதழுவிய ஆய்வு நடத்தப்படுகிறது. நகரங்கள் ஒன்றையொன்று முன்மாதிரியாகக் கொண்டு, தூய்மை நடவடிக்கைகளைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் ஆய்வு ஏற்பாடு செய்யப்படுகிறது.

ஆய்வில் 72 முக்கிய நகரங்கள் முன்மாதிரிகளாகவும் அவற்றைச் சுற்றியுள்ள 200 நகரங்கள் முன்மாதிரி நகர்களிடம் தூய்மைக்கான உத்திகளை பெற்று பலன்பெறும் துணை நகரங்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. தூய்மையின் தரத்தை முன்வைத்து முன்மாதிரி நகர்களுடன் பின்தங்கியுள்ள நகர்கள் ஜோடியாக இணைக்கப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்