இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாநிலத்தில் சீனாவுடன் இணைந்து பாகிஸ்தான் பொருளியல் முன்னேற்ற நடவடிக்கைகளில் (சிபிஇசி) ஈடுபட்டு வருகிறது.
அதனைத் தடுக்கும் நோக்கில் உள்நாட்டுப் பிரிவினைவாத கிளர்ச்சியாளர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதல்களில் 70க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். கடந்த சில ஆண்டுகளில் அங்கு நடத்தப்பட்ட மோசமான தாக்குதலாக அது வகைப்படுத்தப்பட்டுள்ளது.
பலுசிஸ்தான் மாநிலத்தில் இயற்கை வளங்கள் குவிந்து கிடப்பதால் உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் அவற்றைக் கைப்பற்ற முயல்வதாகக் கூறப்படுகிறது.
சீனா அப்பகுதியில் துறைமுகம் கட்டுவது, தங்கம், செம்பு உள்ளிட்ட சுரங்கங்களை ஏற்படுத்துவது போன்ற திட்டங்களில் ஈடுபட்டுவருகிறது.
‘சிபிஇசி’ திட்டத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 65 பில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் அணை கட்டும் திட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த சீனர்கள் அறுவர் கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சீனா பாகிஸ்தானில் உள்ள தனது குடிமக்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்தது.

