தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஸா போர் ‘நரகத்தில்’ 20,000 குழந்தைகள் பிறந்தன: ஐநா

1 mins read
ad9a37c8-7f1c-4c43-b36f-0af6521733b3
10 நிமிடத்துக்கு ஒரு குழந்தை காஸா போரின்போது பிறப்பதாகக் கூறப்படுகிறது. - படம்: இபிஏ

ஜெனிவா: போர் வெடித்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் காஸாவில் ‘நம்ப முடியாத’ சூழல்களில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பிறந்துள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் ஜனவரி 19ஆம் தேதியன்று கூறியது.

காஸா எல்லைப்பகுதிக்கு அண்மையில் சென்றுவந்த நிறுவனப் பேச்சாளர் டெஸ் இன்கிராம் அங்கு தான் கண்ட காட்சிகளை வருணித்துப் பேசியுள்ளார்.

உயிர் போகும் அளவுக்கு ரத்தம் கசிகின்ற நிலையில் இருந்த தாய்மார்கள், ஆறு கர்ப்பிணிப் பெண்களின் சடலங்களுக்கு அவசர அறுவை சிகிச்சை செய்து குழந்தைகளை எடுக்க முயன்ற தாதி போன்ற சூழல்களைத் தான் நேரில் கண்டதாக அவர் தெரிவித்தார்.

இஸ்‌ரேலில் ஹமாஸ் தாக்குதல்கள் அக்டோபர் 7ஆம் தேதியன்று தொடங்கியதை அடுத்து, போர்க்காலத்தின்போது கிட்டத்தட்ட 20,000 குழந்தைகள் பிறந்துள்ளதாக ஐக்கிய நாட்டு சிறுவர் நிதியம் (யுனிசெஃப்) தெரிவித்தது.

“இந்த விகாரப் போரின்போது 10 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது,” என்று ஓமானிலிருந்து காணொளி இணைப்பின்வழி செய்தியாளர்களிடம் இன்கிராம் பேசினார்.

“தாய் ஆவது கொண்டாடப்பட வேண்டிய ஒரு தருணம். ஆனால், நரகத்திற்குள் இன்னொரு குழந்தையைக் கொண்டுவருவதாக காஸா இருக்கிறது,” என்றார் அவர்.

அனைத்துலக ரீதியான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்