அறிவியல் துறைகளுக்கு அதிக இந்திய மாணவர்கள் தேவை: அமெரிக்கா

2 mins read
2a15d1a7-2f62-4aa8-9f91-a1046ef095b2
2023ஆம் ஆண்டில் 140,000 மாணவர் விசாக்களை இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதரகம் வழங்கியுள்ளது. - படம்: இணையம்

வாஷிங்டன்: அமெரிக்கா, சீனாவிலிருந்து அதிகமான மாணவர்களை வரவேற்க வேண்டும். ஆனால், அறிவியல் துறைகளுக்கு அல்ல, மானுடவியல் துறைகளுக்குத்தான் என்று வெளியுறவு துணை அமைச்சர் திங்கட்கிழமை (ஜூன் 25) அன்று தெரிவித்தார்.

பாதுகாப்புக் காரணமாக சீன மாணவர்கள் முக்கியத் தொழில்நுட்பத்தை அணுகுவதை அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் கட்டுப்படுத்துகின்றன.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் போதுமான அமெரிக்கர்கள் பயிலவில்லை என்று வெளியுறவு துணை அமைச்சர் கெர்ட் கேம்பல் கூறினார்.

“அந்தத் துறைகளுக்கு அதிகளவில் அனைத்துலக மாணவர்களை அமெரிக்கா ஈர்க்க வேண்டும். குறிப்பாக அமெரிக்காவின் முக்கியமான பாதுகாப்புத் துறை பங்காளியான இந்தியாவிலிருந்து, சீனாவிலிருந்து அல்ல,” என்று அவர் கூறினார்.

பல ஆண்டுகளாக, அமெரிக்காவின் வெளிநாட்டு மாணவர் தொகையில் சீன மாணவர்களே அதிக அளவில் இருந்து வருகின்றனர். 2022/23 கல்வியாண்டில் கிட்டத்தட்ட 290,000 பேர் படிக்கின்றனர்.

ஆனால் கல்வித்துறை, பொதுத் துறைகளில் உள்ள சிலர், அமெரிக்க-சீன உறவுகள் மோசமடைந்து வருவது, அமெரிக்க நிபுணத்துவத் திருட்டு பற்றிய கவலைகள், அறிவியல் ஒத்துழைப்பில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் சீன மாணவர்களைத் தேவையற்ற சந்தேகத்திற்கும் உள்ளாக்கியுள்ளது என்றும் குறிப்பிட்டனர்.

அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களைத் தேர்வு செய்யும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 69 விழுக்காட்டு இந்திய மாணவர்கள் உயர்கல்விக்கு அமெரிக்காவையே விரும்புகின்றனர் என்று தூதரகத்தின் அதிகாரத்துவ அறிக்கை குறிப்பிட்டது.

2018, 2019, 2020ஆம் ஆண்டுகளைவிட அதிகளவில் 140,000 மாணவர் விசாக்களை 2023ல் இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதரகம் வழங்கியது.

அதே காலகட்டத்தில் மற்ற விசா வகைகளுக்கான தேவை 400 விழுக்காடு அதிகரித்தபோதிலும் மாணவர் விசாவில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு அது.

குறிப்புச் சொற்கள்