வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரம் முக்கிய கட்டத்தை எட்டி உள்ளது.
இன்னும் ஒரு மாதமே எஞ்சியிருக்கும் வேளையில், அமெரிக்காவின் நவீன வரலாற்றில் சந்தித்திராத வியத்தகு தேர்தலாக இது பார்க்கப்படுகிறது.
துணை அதிபரும் ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான கமலா ஹாரிசுக்கும் அவரை எதிர்த்துப் போட்டியிடும் முன்னாள் அதிபரும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டோனல்ட் டிரம்ப்புக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது.
போட்டியிலிருந்து அதிபர் ஜோ பைடன் பின்வாங்கி, 59 வயது துணை அதிபருக்கு வழிவிட்டபோது அதிபர் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியது.
அதேநேரம், இரு கொலைமுயற்சிகளில் தப்பிய 78 வயது டிரம்ப், மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் நுழைய தீவிரமாக முயன்று வருகிறார்.
இதுவரை வெளியான கணிப்புகளில் இருவருக்கும் இடையிலான போட்டி கடுமையாகி உள்ளது. இருவருக்கும் கிட்டத்தட்ட சரிசம செல்வாக்கு நிலவுகிறது.
ஒருவேளை டிரம்ப் தோல்வியுற்றால் 2020ஆம் ஆண்டு தோல்விக்குப் பிறகு ஏற்பட்டதைப் போன்ற குழப்பம் ஏற்படக்கூடும் என்று அவரது குடியரசுக் கட்சியினர் கருதுகின்றனர்.
“இது பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒரு முக்கியமான தேர்தல். போட்டியில் வெல்ல இரு வேட்பாளர்களும் (டிரம்ப், ஹாரிஸ்) கடுமையாகப் போராடுகிறார்கள்,” என்று ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஊடக, பொது விவகாரக் கல்விப் பிரிவின் இயக்குநர் பேராசிரியர் பீட்டர் லோஜ் குறிப்பிட்டு உள்ளார்.