நெகிரி செம்பிலான்: பதவி நீக்கப்பட்டதை உறுதிசெய்தனர் செயற்குழு உறுப்பினர்கள் இருவர்

நெகிரி செம்பிலான்: பதவி நீக்கப்பட்டதை உறுதிசெய்தனர் செயற்குழு உறுப்பினர்கள் இருவர்

படம்: மலாய் மெயில்

21 Sep 2026 - 5:22 pm

2 mins read

செரம்பான்: நெகிரி செம்பிலான் மாநிலச் செயற்குழு உறுப்பினர் சுஹைமிஸான் பிஸார், தாம் பதவியிலிருந்து அகற்றப்பட்டது குறித்த அதிகாரபூர்வ கடிதம் கிடைத்ததை உறுதிசெய்திருக்கிறார்.

கெமென்சே சட்டமன்ற உறுப்பினரும் சுகாதாரம், ஒற்றுமை, தகவல் தொடர்பு, தேசிய ஒருமைப்பாடு, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகிய துறைகளுக்குப் பொறுப்பு வகித்தவருமான திரு சுஹைமிஸான், பதவி நீக்கம் தொடர்பான சூழ்நிலைகள் குறித்துக் கூடுதல் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

‘சினார் ஹரியான்’ ஊடகம் அந்தத் தகவலை வெளியிட்டது.

“நேற்றிரவு வாட்ஸ்அப் மூலம் எனக்குக் கடிதம் வந்தது உண்மைதான். ஆனால், என்னால் கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது. மன்னிக்கவும். யார் அதை அனுப்பினார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, அரண்மனையிலிருந்து வந்ததாக நினைக்கிறேன்,” என்றார் திரு சுஹைமிஸான்.

மாநிலத் தொழில்முனைவர், மனிதவள, பருவநிலை மாற்றம், கூட்டுறவு, பயனீட்டாளர் விவகாரங்கள் குழுவின் தலைவர் ஃபைரூசும் அரண்மனையிலிருந்து பதவி நீக்கக் கடிதம் கிடைத்ததை உறுதிப்படுத்தியதாக ‘பெர்னாமா’ ஊடகம் தெரிவித்தது.

அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தெரிந்துகொள்ள, பாதிக்கப்பட்ட மற்றச் செயற்குழு உறுப்பினர்களைத் தொடர்புகொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

செப்டம்பர் 15ஆம் தேதி ஆற்றிய உரைகள், எடுத்த நடவடிக்கைகள் மூலம் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் பதவிப் பிரமாணத்தை மீறிவிட்டதாக நெகிரி செம்பிலான் மன்னர் முஹ்ரிஸ் துவாங்கு முனாவி கூறியிருந்தார். அதனால் அவர்களைப் பதவியிலிருந்து உடனடியாய் நீக்குவதாக அவர் அரசாணை பிறப்பித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அன்றைய கூட்டத்தில், துவாங்கு முஹ்ரிஸைப் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான பிரகடன ஆவணத்தை ஏகமனதாய் ஒப்புக்கொண்ட மாநிலச் செயற்குழு, அதை அதிகாரபூர்வ அரசிதழில் வெளியிடுமாறு மாநிலச் செயலாளருக்கு உத்தரவிட்டது. இந்த விவகாரமே மன்னரின் இத்தகைய அதிரடி நடவடிக்கைக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் தொடர்ந்து பதவியில் நீடிப்பர் என்று நெகிரி செம்பிலான் முதல்வர் இஸ்மாயில் லசிம் கூறியுள்ளார். முதல்வரின் ஆலோசனையின்றி அவர்களை மன்னர் பதவியிலிருந்து அகற்ற முடியாது என்று திரு இஸ்மாயில் கூறினார்.

மாநிலத்தின் நிர்வாக அமைப்பு அரசியலமைப்புக்கு உட்பட்ட முடியாட்சி மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டது என்று அவர் திங்கட்கிழமை (செப்டம்பர் 21) வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் குறிப்பிட்டார்.

அரசியலமைப்புப் பிரிவு 40(2)ன் கீழ் எழுத்துபூர்வமாகக் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் மட்டுமே ஆட்சியாளரின் தன்னிச்சையான அதிகார வரம்பிற்குட்பட்டவை என்று மாநில முதல்வர் வாதிட்டார். செயற்குழு உறுப்பினரைத் தன்னிச்சையாகப் பதவி நீக்கம் செய்யும் அல்லது அவரது பதவிக் காலத்தை முடிவுக்குக் கொண்டுவரும் அதிகாரம் அவற்றில் சேர்க்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இத்தகைய ஆலோசனையின்றி செய்யப்படும் எந்தவொரு பதவி நீக்கமும் சட்டப்படி தவறு என்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும் திரு இஸ்மாயில் சுட்டினார்.

பிரிவு 38(5)ன் கீழ் எந்தவொரு செயற்குழு உறுப்பினரையும் பதவி நீக்கம் செய்வது குறித்துத் தம்மிடம் ஒருபோதும் ஆலோசிக்கப்படவோ தாம் அறிவுறுத்தப்படவோ இல்லை என்றும் நெகிரி செம்பிலான் முதல்வர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்