சிரம்பான்: நெகிரி செம்பிலானின் ஆட்சியாளரின் நிலைப்பாடு தொடர்பான மாநிலச் செயற்குழுவின் முடிவை நெகிரி செம்பிலான் முதல் அமைச்சர் இஸ்மாயில் லாசிம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) உறுதிப்படுத்தினார்.
அனைத்து மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு கூட்டத்தில் பிரகடனம் தொடர்பாக விவாதித்து ஒருமனதாக முடிவு செய்தனர் என்றார் அவர்.
துவாங்கு நட்சருதீன் துவான்கு ஜாஃபர் தற்போது மாநிலத்தின் புதிய ஆட்சியாளராகப் பொறுப்பேற்றுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆட்சியாளர் அறிவிப்பு ஆவணம் மாநிலச் சட்டங்களின்கீழ் குறிப்பிடப்பட்டுள்ள செயல்முறைகளுக்கும் நடைமுறைகளுக்கும் உட்பட்டு அமையவில்லை எனத் தற்போதைய மாநில அரசு பகிரங்கமாகத் தெரிவித்துள்ளதாக நெகிரி செம்பிலானின் முன்னாள் முதல்வர் அமினுடின் ஹருண் கூறினார். மேலும், அந்த அறிவிப்பு செல்லாது என்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது என்றும் அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக, ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதியன்று நெகிரி செம்பிலானின் முதல்வர் இஸ்மாயில் லாசிம், துவாங்கு முஹ்ரிசைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான அறிவிப்பு ஆவணத்தில் கையெழுத்திட்டிருந்தார்.
ஆனால், ஏறத்தாழ ஒரு மாதத்துக்குப் பிறகு, கட்டாயத்தின் பேரிலேயே தாம் அதில் கையெழுத்திட்டதாகத் தெரிவித்த அவர், இது குறித்து காவல்துறையிலும் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்தப் பிரகடனத்தின் செல்லுபடித்தன்மையையோ அல்லது ஆட்சியாளர் பதவியின் நிலையையோ தீர்மானிக்க மாநில நிர்வாகக் குழுவிற்கு அதிகாரம் இல்லை என்று ஆட்சியாளர் மற்றும் வட்டாரத் தலைவர்கள் குழு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையிலும், இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது.
துவாங்கு முஹ்ரிஸ் சட்டபூர்வமான ஆட்சியாளராகத் தொடர்கிறார் என்றும், ஆட்சியாளரின் நியமனம் மற்றும் நீக்கம் உள்ளிட்ட மலாய் மரபு சார்ந்த கேள்விகள், நெகிரி செம்பிலான் அரசியலமைப்பின் கீழ் அதன் அதிகார வரம்பிற்குள் வருகின்றன என்றும் ஆட்சியாளர் மற்றும் வட்டாரத் தலைவர்கள் குழு வலியுறுத்தியது.
துவாங்கு முஹ்ரிஸ் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை உறுதிப்படுத்துவது, புதிய ஆட்சியாளரை அங்கீகரிப்பது மற்றும் அதை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிடுவது ஆகிய அம்சங்களைக் கொண்ட மாநில நிர்வாகக் குழுவின் செப்டம்பர் 16ஆம் தேதி முடிவுக்கு எந்தவொரு சட்டப்பூர்வமான செல்லுபடியாகும் தன்மையும் இல்லை என்று ஆட்சியாளர் மற்றும் வட்டாரத் தலைவர்கள் குழு செம்டம்பர் 17ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
