தேர்தலுக்காக நெகிரி செம்பிலான் வாக்காளர்கள் மாநிலம் திரும்ப வலியுறுத்தல்

தேர்தலுக்காக நெகிரி செம்பிலான் வாக்காளர்கள் மாநிலம் திரும்ப வலியுறுத்தல்

2 mins read
aaea7c76-30a3-4696-bb35-062c48a4de6c
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான மாநிலத்தின் எதிர்காலத்தை இந்தத் தேர்தல் தீர்மானிக்கும் என்று நெகிரி செம்பிலான் சீனச் சபை தெரிவித்துள்ளது. - படம்: ஃபிரீ மலேசியா டுடே

பெட்டாலிங் ஜெயா: நெகிரி செம்பிலான் சீனச் சபை, வாக்களிக்கத் தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களும் குறிப்பாக, மாநிலத்திற்கு வெளியே பணிபுரிபவர்கள், படிப்பவர்கள் அல்லது வசிப்பவர்கள், ஆகஸ்ட் முதல் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களிக்க மாநிலத்திற்குத் திரும்புமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தத் தேர்தல், புதிய சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது மட்டுமன்று. அது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான மாநிலத்தின் திசையைத் தீர்மானிப்பதாகும் என்றும் அது பொருளியல், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, பொதுப் பாதுகாப்பு போன்ற துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சீனச் சபை கூறியதாக ‘ஒரியென்டல் டெய்லி’ செய்தி வெளியிட்டது.

கடந்த நான்கு ஆண்டுகளில், மக்கள் மாநிலத்தின் வளர்ச்சியையும் மாற்றங்களையும் நேரில் அனுபவித்துள்ளனர் என்றும் தற்போதைய, முந்திய மாநில அரசாங்கங்களின் செயல்பாடுகள் குறித்து அவர்கள் சொந்த மதிப்பீட்டைக் கொண்டிருப்பார்கள் என்றும் நெகிரி செம்பிலான் சீனச் சபை கூறியது.

கடந்த நான்கு ஆண்டுகளில் தற்போதைய, முந்திய மாநில அரசாங்கங்களின் செயல்பாடுகளை வாக்காளர்கள் பார்த்திருக்கிறார்கள் என்றும் உண்மைகள், முந்திய சாதனைகள், மாநிலத்தின் நீண்டகால நலன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் தங்களது தேர்வைச் செய்ய வேண்டும் என்றும் அது கூறியது.

“ஒப்பீடு இருந்தால் மட்டுமே முன்னேற்றம் ஏற்படும்; மேற்பார்வை இருந்தால் மட்டுமே சிறந்த ஆட்சி அமையும்,” என்றும் அது குறிப்பிட்டது.

தற்போதைய அரசியல் சூழ்நிலையால் வாக்காளர்கள் சிலர் ஏமாற்றம் அடைந்துள்ளதையும் ஒரு வாக்கு மட்டுமே தற்போதைய சூழ்நிலையை மாற்றிவிடாது என்று அவர்கள் நம்பக்கூடும் என்பதையும் அந்தச் சபை ஒப்புக்கொண்டது.

“இருப்பினும், வாக்களிக்கும் உரிமையைக் கைவிடுவதால் உண்மை நிலை மாறப்போவதில்லை. மாறாக, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சி நோக்கிச் செல்லும் திசை, பொதுமக்களின் கண்காணிப்பிற்கு மேலும் குறைவாகவே உட்படுத்தப்படும் நிலையைக் குறிக்கலாம்,” என்று அது கூறியது.

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 16வது சட்டமன்றத் தேர்தலில் 36 இடங்களுக்குப் போட்டி நிலவுகிறது; 889,490 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்