செரம்பான்: நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) தொடங்கியிருக்கிறது.
நெகிரி செம்பிலானில் மொத்தம் 36 தொகுதிகள். மாநிலம் முழுதும் உள்ள 401 வாக்குச்சாவடிகளும் காலை 8 மணிக்குத் திறக்கப்பட்டன. கிட்டத்தட்ட 900,000 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.
அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவு, வீடமைப்பு முதலிய விவகாரங்கள் பிரசாரங்களின்போது முக்கியமாகப் பேசப்பட்டன.
இந்தத் தேர்தல் பெரும்பாலும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்கும் தேசிய முன்னணி-பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணிக்கும் இடையிலான போட்டியாகப் பார்க்கப்படுகிறது.
பக்கத்தான் ஹரப்பான் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. தேசிய முன்னணி 25 இடங்களிலும் எஞ்சிய 11 தொகுதிகளில் பெரிக்கத்தான் நேஷனலும் களம் காண்கின்றன.
சென்ற மாதம் 11ஆம் தேதி ஜோகூரில் நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 56 இடங்களில் தேசிய முன்னணி 48 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. அந்த மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இந்த இரு கூட்டணிகளும் மலாய் ஒற்றுமை ஒப்பந்தத்தை மேலும் வலுப்படுத்திக் கொண்டுள்ளன.
இந்நிலையில், பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங், கட்சி உறுப்பினர்களை தேசிய முன்னணி வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்குமாறும் வாக்களிக்குமாறும் கேட்டுக்கொண்டிருந்தார். பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆகப் பெரிய கட்சி, பாஸ்.
இருப்பினும் மத்தியில் பக்கத்தான் ஹரப்பானும் தேசிய முன்னணியும் ஒற்றுமை அரசாங்கத்தில் கூட்டாக இருக்கின்றன. 2022 பொதுத் தேர்தலுக்குப் பிறகு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் அது.

