சிரம்பான்: மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி 19 பிரசார நிகழ்வுகளுக்குக் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
தகுதி விதிமுறைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதை அடுத்து அந்நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக நெகிரி செம்பிலான் மாநிலக் காவல்துறைத் தலைவர் அல்சாஃப்னி அகமது தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாதவாறு பிரசார நிகழ்ச்சிகள் அனைத்தும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்று அவர் கூறினார்.
“ஒட்டுமொத்தத்தில், 16வது நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தல் காலகட்டத்தில் பாதுகாப்பு நிலவரம் சுமுகமாகவும் கட்டுப்பாட்டிற்குள்ளும் இருக்கிறது. அமலாக்க நடைமுறைகளின்படி, தேர்தல் விதிமீறல்கள் தொடர்பில் இதுவரை ஒரே ஒரு புகார் மட்டுமே வந்துள்ளது. அதுகுறித்து இன்னும் விசாரணை தொடங்கப்படவில்லை,” என்று அவர் தெரிவித்தார்.
தேர்தல் முடியும்வரை தங்களது தயார்நிலை மற்றும் கண்காணிப்புப் பணிகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என்று திரு அல்சாஃப்னி உறுதியளித்தார்.
சட்டத்தை மீறுவோர் யாராக இருந்தாலும் அவர்கள்மீது எவ்வித சமரசமுமின்றி முறையான சட்ட நடவடிக்கைகள் பாயும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஜனநாயக வழிமுறைகளை மதித்து அமைதியான முறையில் தேர்தல் நடைபெற பொதுமக்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
மொத்தம் 36 தொகுதிகளைக் கொண்ட நெகிரி செம்பிலான் சட்டமன்றம் கடந்த ஜூன் 5ஆம் தேதி கலைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஜூலை 28ஆம் தேதி முன்கூட்டிய வாக்களிப்பும் ஆகஸ்ட் 1ஆம் தேதி பொதுமக்களுக்கான வாக்களிப்பும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

