சிரம்பான்: நேப்பாளத்தில் ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 55 மலேசியர்களின் குடும்பத்தினரிடமிருந்து மரபணு மாதிரிகள் பெறப்பட்டு, அவை நேப்பாள அதிகாரிகளுக்கு அனுப்பப்பட உள்ளதாக மலேசிய வெளியுறவு அமைச்சர் முகமது ஹசான் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இந்தச் செயல்முறை முடிவடையச் சிறிது காலம் எடுக்கும் என்று சனிக்கிழமை (செப்டம்பர் 5) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறினார்.
தேவைப்பட்டால் மலேசிய வேதியியல் துறையைச் சேர்ந்த நிபுணர்களை அனுப்ப மலேசியா தயாராக உள்ளது என்றார் அவர்.
காத்மாண்டுவில் உள்ள மலேசியத் தூதரகம் மூலம் நிலைமை அணுக்கமாகக் கண்காணிக்கப்படுகிறது. காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு உடனுக்குடன் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பதில் சிரமம் ஏற்படுவதைத் தவிர்க்க வெளிநாட்டு மீட்புக் குழுக்களின் வருகையை நேப்பாள அரசு கட்டுப்படுத்தியுள்ளது.
எனினும், மலேசியாவின் ‘ஸ்மார்ட்’ பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 11 அதிகாரிகள் சனிக்கிழமை காலை 10 நாள் பயணமாக நேப்பாளத்திற்குச் சென்றனர்.
ஆகஸ்ட் 26ஆம் தேதி நிகழ்ந்த இப் பேரிடருக்குப் பின் 55 மலேசியர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அதேவேளையில், பாதுகாப்பாக மீட்கப்பட்ட 77 மலேசியர்களில் சிலர் நாடு திரும்பியுள்ளனர். எஞ்சியவர்கள் விரைவில் மலேசியா திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


