நேப்பாளப் பெருவெள்ளம்: இரு சிங்கப்பூரர்கள் உட்பட நூற்றுக்கணக்கான சுற்றுப்பயணிகள் மாயம்

நேப்பாளப் பெருவெள்ளம்: இரு சிங்கப்பூரர்கள் உட்பட நூற்றுக்கணக்கான சுற்றுப்பயணிகள் மாயம்

2 mins read
e7ee800b-d2ff-4f50-9ba9-bdd0c86530e8
பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ளத்தால் மக்கள் பலர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

காத்மாண்டு: நேப்பாளம்-திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் 1,300க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்றும் குறைந்தது 165 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) நிலவரப்படி, மொத்தம் 823 பேரைக் காணவில்லை என்றும் இதில் குறைந்தது 579 நேப்பாள மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அடங்குவர் என்றும் நேப்பாளப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், தொடர்கொள்ளப்படாத வெளிநாட்டினரின் குடியுரிமை குறித்த விவரங்களை அந்த ஆணையம் வெளியிடவில்லை. இதனிடையே, எல்லையின் மறுபக்கத்தில், மொத்தம் 558 பேரைக் காணவில்லை என்று சீனா தெரிவித்துள்ளது. அவர்களில் ஏறத்தாழ 50 விழுக்காட்டினர் வெளிநாட்டவர்கள் என்று அது கூறியது.

எவரெஸ்ட் சிகரம் உட்பட உலகின் மிக உயர்ந்த மலைச்சிகரங்களில் ஏறித் தங்களது திறனைச் சோதித்துப் பார்ப்பதற்காக உலகெங்கிலும் இருந்து எண்ணற்ற மலையேற்ற வீரர்களும் சிகரமேறுபவர்களும் நேப்பாளத்துக்குத் திரள்வது வழக்கம்.

இந்த பெருவெள்ளத்தின்போது இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் இருமுறை கணக்கிடப்படுதல், கண்டெடுக்கப்பட்ட உடல்களைக் காணாமல் போனோர் பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்த்தல் மற்றும் பேரிடர் காலத்தில் நிலவும் குழப்பமான சூழல் ஆகியவற்றின் காரணமாக, காணாமல் போனோர் எண்ணிக்கை மேலும் மாறக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமைக்குப் (ஆகஸ்ட் 26) பிறகு புதுப்பிக்கப்படாத நேப்பாளப் சுற்றுலா வாரியத்தின் தரவுகளின்படி, அண்டை நாடான இந்தியாவைச் சேர்ந்த 142 பேரைக் காணவில்லை.

அதேபோல, பேரழிவைத் தொடர்ந்து சீனாவைச் சேர்ந்த 298 பேரைக் காணவில்லை என்று சீன அதிகாரிகள் வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 27) தெரிவித்தனர். நேப்பாளத்தில் உள்ள 53 உக்ரேனியக் குடிமக்கள் காணாமல் போயிருக்கலாம் என்று நேப்பாள அதிகாரிகள் கருதுவதாக உக்ரேனிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதில் அதிகாரிகளுடனான தொடர்பை இழந்த 46 உக்ரேனியச் சுற்றுப்பயணிகள் அடங்கிய குழுவும் அடங்கும் என்று அது மேலும் கூறியது. குடும்ப உறுப்பினர்கள், பயண முகமைகள் மற்றும் பிற தொடர்புடைய ஆதாரங்களிடம் இருந்து பெறப்பட்ட அண்மைய தகவல்களின்படி, வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து நேப்பாளத் தலைநகர் காத்மண்டுவில் உள்ள மலேசியத் தூதரகத்திடம் பதிவு செய்யப்பட்ட 55 மலேசியர்களைத் தற்போது தொடர்புகொள்ள முடியவில்லை என்று மலேசிய வெளியுறவு அமைச்சு வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 27) அறிவித்தது.

நேப்பாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தைத் தொடர்ந்து, இரண்டு குழந்தைகள் உட்பட 47 பேர் கொண்ட குழு ஒன்றைக் காணவில்லை என்று ‘இமலேயன் கிளேசியர்’ பயண நிறுவனம் வியாழக்கிழமையன்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது. அந்தக் குழுவில் இரண்டு சிங்கப்பூரர்கள், 15 ஆஸ்திரேலியர்கள், 10 கனடியர்கள், ஒன்பது நேப்பாளிகள், எட்டு அமெரிக்கர்கள், இரண்டு பிரிட்டஷ்காரர்கள், இரட்டைக் குடியுரிமை பெற்ற ஒரு ரஷ்ய-அமெரிக்கர் ஆகியோர் அடங்குவர் என்று அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சங்கேத் பாண்டே கூறினார்.

குறிப்புச் சொற்கள்