நேப்பாள வெள்ளம்: குடும்பத்துடன் இணைந்த காணாமற்போன மலேசியர்

நேப்பாள வெள்ளம்: குடும்பத்துடன் இணைந்த காணாமற்போன மலேசியர்

படம்: ராய்ட்டர்ஸ்

02 Oct 2026 - 5:43 pm

2 mins read

பெட்டாலிங் ஜெயா: நேப்பாள வெள்ளத்தில் காணாமற்போனதாக நம்பப்பட்ட மலேசியர் ஒருவர் பாதுகாப்பாக தாய்நாட்டுக்குத் திரும்பியுள்ளார்.

நேப்பாளத்தில் காணாமற்போன மலேசியர்களைப் பிரதிநிதிக்கும் அமைப்பு ஒன்று அதை உறுதிப்படுத்தியது.

‘மலேசியா ஒற்றுமை: நம்பிக்கையில் குடும்பங்கள்’ (மஸ்ஃபி) என்ற அமைப்பின் பேச்சாளர் மணிவண்ணன் ரெத்தினம், காணாமற்போன நபர், காத்மாண்டுவில் உள்ள மலேசியத் தூதரத்துக்கு நேரில் சென்று விவரத்தைப் பகிர்ந்துகொண்டதாகக் கூறினார்.

“பேரிடர் ஏற்பட்டு 37 நாள்கள் கழித்து மலேசியர் ஒருவர் பாதுகாப்பாக இருப்பதைக் காண்பது எங்கள் அமைப்பிற்கும் குடும்பங்களுக்கும் பெரிய ஆறுதல்,” என்று திரு மணிவண்ணன் பகிர்ந்துகொண்டார்.

அந்த வகையில் காணாமற்போனதாகக் கூறப்பட்ட மலேசியர்களில் ஒருவர் பாதுகாப்பாகத் தமது குடும்பத்தினரிடம் திரும்பியதில் மனநிறைவடைகிறோம் என்று அமைப்பு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 2) அறிக்கை வெளியிட்டது.

காணாமற்போன மலேசியர் சீன இனத்தவர் என்றும் தனியாகப் பயணம் செய்தோரில் ஒருவர் என்றும் திரு மணிவண்ணன் குறிப்பிட்டார்.

“அந்த நபர், வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கு ஒரு நாள் முன்பு, ஆகஸ்ட் 25ஆம் தேதி பிற்பகல் 3.26 மணிவாக்கில் நாக்தல்லி வியூபாய்ண்ட் என்ற இடத்தில் இருந்ததாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. வெள்ளத்தில் சாலைகளும் பாலங்களும் கடுமையாகச் சேதமடைந்ததால் அவர் இருந்த இடத்தில் சிக்கிக்கொண்டதை அவரது உறவினர்கள் கூறினர்,” என்றார் மணிவண்ணன்.

ஆகஸ்ட் 26ஆம் தேதி, நேப்பாள எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் 1,400க்கும் அதிகமானோர் மாண்டனர். ஆயிரத்துக்கு மேற்பட்டோரை இன்னும் காணவில்லை.

நேப்பாள வெள்ளத்தில் உயிரிழந்தோரை அடையாளம் காணும் சவால்

இதற்கிடையே, தொழில்நுட்பத் திறன் தட்டுப்பாடுக்கும் மனிதவளப் பற்றாக்குறைக்கும் இடையே ஆயிரக்கணக்கான மரபணு மாதிரிகளைச் சோதிக்கவேண்டிய நிலை இருப்பதால் உடல்களை அடையாளம் காண இன்னும் பல வாரங்கள் எடுக்கலாம் என்று வல்லுநர்கள் எச்சரித்தனர்.

நேப்பாளப் பேரிடர் அதிகாரிகள் 1,454 உடல்களை மீட்டுள்ளனர். ஆனால், அவற்றுள் மூன்றில் ஒரு பகுதி எஞ்சிய உடற்பாகங்களாக இருக்கின்றன.

இதுவரை 112 உடல்கள் மட்டும் அடையாளம் காணப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் உட்பட் 5,285 பேரை இன்னமும் காணவில்லை.

மொத்தம் 3,685 தடயவியல் மாதிரிகளில் மரபணுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றுள் 1,300க்கும் மேற்பட்டவை மீட்கப்பட்ட உடல்களிலிருந்து சேகரிக்கப்பட்டவை.

ரத்த மாதிரிகளைக் கொண்டு மாண்டோரை அடையாளம் காண்பது எளிது என்ற அதிகாரிகள், பல், எலும்பு போன்றவற்றைக் கொண்டு அடையாளம் காண பல நாள்கள் தேவைப்படும் என்றனர்.

குறிப்புச் சொற்கள்