நேப்பாளப் பெருவெள்ளம்: மாயமானோர் எண்ணிக்கை 2,400ஐத் தாண்டியது

நேப்பாளப் பெருவெள்ளம்: மாயமானோர் எண்ணிக்கை 2,400ஐத் தாண்டியது

2 mins read
28453e09-0d26-472a-8bcb-9cb31270fb07
மீட்புக் குழுவினர் இதுவரை 586 சடலங்களை மீட்டுள்ளனர். மேலும் சில உடல்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, இந்தியப் பகுதிகள் வரை கண்டெடுக்கப்பட்டுள்ளன.s) - படம்: நியூயார்க் டைம்ஸ்
Google News Preferred Icon

நுவாகோட்: நேப்பாளம் - திபெத் எல்லைப் பகுதிகளில் கிராமங்களைச் சூறையாடிய சுனாமி போன்ற திடீர் பெருவெள்ளம் மற்றும் மண் சரிவில் சிக்கி மாயமானவர்களின் எண்ணிக்கை வெள்ளக்கிழமை (ஆகஸ்ட் 28) நிலவரப்படி 2,400ஐக் கடந்துள்ளது. பேரழிவு நடந்து சில நாள்கள் கடந்துவிட்ட நிலையில், மீட்புக் குழுவினர் இதுவரை 586 சடலங்களை மீட்டுள்ளனர். மேலும் சில உடல்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, இந்தியப் பகுதிகள் வரை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

புதிய வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவும் நிலையிலும், மீட்புக் குழுவினர் சகதி மற்றும் சேற்றுக்கு இடையே தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திபெத்தில் உள்ள புனித கயிலாய மலைக்குச் சென்ற பக்தர்கள், மலையேற்றப் பயணிகள் ஆகியோருடன், நீர்மின் நிலையங்களில் பணியாற்றிய 933 ஊழியர்களின் பெயர்களையும் நேப்பாளப் பேரிடர் மேலாண்மை ஆணையம் மாயமானோர் பட்டியலில் புதிதாகச் சேர்த்துள்ளது. இதனால் மாயமானோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நேப்பாளத் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனைகளில், மாயமான தங்கள் உறவினர்களைத் தேடி உறவினர்கள் பெருந்திரளாகக் கூடி கதறி அழுகின்றனர்.

மருத்துவமனைச் சுவர்களில் மாயமானவர்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. “இன்றுடன் மூன்று நாள்கள் ஆகிவிட்டன. என் சகோதரரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. அவர் எங்காவது பாதுகாப்பான இடத்தில் இருப்பார் என்று நம்புகிறோம். நாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம். அவர்தான் எங்களுக்கு எல்லாம்,” என்று 27 வயதான சம்ஜனா திங் வேதனையுடன் தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் பிறகு நேப்பாளத்தைச் தாக்கிய மிக மோசமான பேரழிவு இதுவாகும். இமயமலைப் பகுதியில் பனிப்பாறை சரிந்ததால் ஏற்பட்ட பனி மற்றும் சேறு கலந்த வெள்ளப் பெருக்கே இந்த அழிவுக்குக் காரணம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பனி மற்றும் சேற்றுக் கழிவுகளின் தேக்கத்தால் அப்பகுதியில் பெரிய செயற்கை ஏரிகள் உருவாகியுள்ளன. இதில் ஒரு ஏரி உடைந்து பெருக்கெடுக்கும் அபாயம் உருவானதால், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் உயிருக்கு நேரடி அச்சுறுத்தல் ஏற்பட்டது.

“திபெத் பகுதியில் தடுப்பணை மீண்டும் உடைந்துவிட்டதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, மீட்புக் குழுவினர் அனைவரும் “உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு நேப்பாளக் காவல்துறை அவசர எச்சரிக்கை விடுத்தது.

சீனப் பகுதியான திபெத்தின் ஜியிரோங் என்ற மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதியில் மீண்டும் வெள்ளம் பெருக்கெடுக்கும் அபாயம் காரணமாக வெள்ளக்கிழமை (ஆகஸ்ட் 28) சீனா தனது மீட்பு நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

பின்னர் அந்த அபாயம் குறைந்ததாகத் தெரிவித்தது. குப்பைக் கூளங்களால் உருவான ஏரி நிரம்பி மீட்புக் குழுவினர் செல்லும் வழியை நோக்கி வழிந்தோடியதாகவும் பின்னர் ஏரியின் நீர்மட்டம் குறைந்ததால் மீட்புப் பணிகள் மீண்டும் சீராகத் தொடங்கப்பட்டதாகவும் சீன அரசு ஊடகமான ‘சிசிடிவி’ செய்தி வெளியிட்டுள்ளது.

மீட்புப் பணிகள் குறித்த உயர்மட்டக் கூட்டத்தை நடத்திய சீன அதிபர் ஸி ஜின்பிங், நேப்பாளத்தின் அவசரகால மீட்பு நடவடிக்கைகளுக்குத் தமது நாடு உதவும் என்று உறுதியளித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்