நேப்பாளத்தில் அண்மையில் ஏற்பட்ட பேரழிவுமிக்க வெள்ளப் பெருக்கின்போது, நீர் பெருக்கெடுத்து ஓடிவருவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பே மக்களுக்கு எச்சரிக்கை கிடைத்ததாகக் கூறப்பட்டது.
இது, உயரமான மலைப்பகுதிகளில் நிலவும் வானிலை கண்காணிப்பிலும் அண்டை நாடான சீனாவுடனான தகவல் பகிர்விலும் உள்ள குறைபாடுகளை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.
இமயமலை போன்ற மலைப்பகுதிகளில் போதிய வானிலை ஆய்வு நிலையங்கள் இல்லாததே நாங்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால்களின் ஒன்று என நேப்பாளத் தேசியப் பேரிடர் அபாயக் குறைப்பு, நிர்வாக ஆணையத் தலைமை நிர்வாகி தரம் ராஜ் உப்ரேட்டி தெரிவித்துள்ளார்.
மேலும், எல்லை கடந்த தகவல் பகிர்வு நடைமுறைகள் குறைவாக இருப்பதும் அதற்கு முக்கியக் காரணம் என அவர் கூறினார்.
800க்கும் அதிகமானோரைக் கொன்ற அந்த வெள்ளப்பெருக்கு, பனிப்பாறை சரிவினால் தூண்டப்பட்டு, கட்டடங்கள், பாலங்கள், உள்கட்டமைப்புகள் ஆகியவற்றை அடித்துச் சென்றது. இதனால் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு 5 பில்லியன் அமெரிக்க டாலரை ($6.37 பில்லியன் ) எட்டக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அதன் மறுசீரமைப்புப் பணிகளுக்கு ஏழு முதல் எட்டு ஆண்டுகள் வரை ஆகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
“அதிகரித்து வரும் வெப்பநிலையானது பனிப்பாறைகளைச் சீர்குலைத்து வருகிறது. நிலைமையைக் கண்காணிக்க அமைப்புகளை உருவாக்குவதற்கு முன்பாகவே சூழல் வேகமாக மோசமடைந்து வருவதால், எல்லை கடந்த பேரிடர் மேலாண்மையில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்,” எனத் திரு உப்ரேட்டி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏற்கெனவே சாத்தியமான வழிகளில் கண்காணிப்புத் தகவல்களைப் பகிர்ந்து வருவதாகச் சீனா தெரிவித்துள்ளதுடன், திபெத்தியச் சமவெளி முழுவதும் ஆய்வுகளை விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளது.
ஆரம்பகால எச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்துவதும் பேரிடர்களுக்கு ஏற்ப ஆயத்தமாகும் வகையில் மக்களுக்கு அதிக நேரத்தை வழங்குவதும் தற்போது முதன்மை இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது.
பருவநிலைத் தகவல்கள் பரிமாற்றத்திற்கு எல்லைகள் வகுப்பதைத் தவிர்க்காவிட்டால், தொலைதூர மலைப் பகுதிகளில் உருவாகும் ஆபத்துகளை முன்கூட்டியே கணிப்பது மிகவும் கடினம் என நேப்பாள அதிகாரி குறிப்பிட்டார்.


