புதுடெல்லி: நேப்பாளம்-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் நூற்றுக்கணக்கானோரைக் காணாத நிலையில், கயிலாயப் பயணம் மேற்கொண்ட இந்து யாத்ரீகர்கள் பலரும் மாயமாகியுள்ளனர் என்று பிரபல இந்துச் சமய ஆன்மீகத் தலைவரும் ஈஷா அறக்கட்டளையின் நிறுவனருமான சத்குரு ஜக்கி வாசுதேவ் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) தெரிவித்துள்ளார்.
சத்குருவின் சமூக ஊடகப் பக்கங்களை உலகெங்கும் ஆயிரக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர். இந்நிலையில், அவர் திபெத்திலிருந்து பதிவுசெய்த உருக்கமான காணொளியை சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். புதன்கிழமை (ஆகஸ்ட் 26) வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, நேப்பாள-சீன எல்லைக் குடிநுழைவு அலுவலகத்தில் ஏறத்தாழ 77 யாத்ரீகர்கள் இருந்ததாக அவர் அதில் தெரிவித்துள்ளார்.
சீன எல்லையின் கட்டடத்தின் மீது சேறும் சகதியும் நிறைந்த வெள்ளநீர் மோதி அழித்த திடுக்கிடும் கண்காணிப்புக் கேமரா பதிவையும் அவர் பகிர்ந்துள்ளார். சத்குருவின் ஈஷா அறக்கட்டளை சார்பில் இந்தக் கயிலை மலை யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திபெத்திலுள்ள பனி படர்ந்த கயிலாய மலைக்கு இந்து யாத்ரீகர்கள் பலர் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
“எங்கள் குழுவினர் அனைவரும் அந்த எல்லைக் கட்டடத்தில்தான் இருந்தனர். இது ஒரு கொடூரமான, அசாதாரண நிகழ்வு” என்று மிகுந்த மனவேதனையுடன், கண்ணரீ மல்க சத்குரு கூறினார். காணொளியின் பின்னணியில் அவருடன் இருக்கும் சக யாத்ரீகர்கள் கதறி அழும் சத்தத்தையும் கேட்க முடிந்தது.
“அனைத்து தொலைபேசிகளும் இயங்கவில்லை; தொலைத்தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகள் அடைபட்டுள்ளதால் எங்களால் அங்குச் செல்ல முடியவில்லை” என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட இந்தச் சுனாமி போன்ற வெள்ளப்பெருக்கும் சேற்றுப் பெருக்கும் பள்ளத்தாக்கு முழுவதையும் விழுங்கியுள்ளது.
“எங்களிடம் அதிகாரபூர்வத் தகவல்கள் எதுவும் இல்லை. ஆனால் பேரழிவின் அளவைப் பார்க்கும்போது நிலைமை மிகவும் மோசமாகத் தெரிகிறது,” என்று சத்குரு கூறினார்.
“ஒரு வாரத்துக்கு முன்பு நாங்கள் குடிநுழைவுச் சோதனைகளுக்காக இருந்த அதே கட்டடம் மற்றும் அந்த நகரின் ஒரு பகுதி முழுமையாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
காணாமல்போன யாத்ரீகர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் நாடுகள் வாரியான பட்டியலை சத்குரு வாசித்தார். அதில் சிங்கப்பூரர்களும் அடங்குவர்.
கயிலாய மலை மற்றும் மானசரோவர் ஏரிக்கான இந்த ஆன்மீகப் பயணத்தை இந்தியாவின் வெளியுறவு அமைச்சு, சீன அதிகாரிகளுடன் இணைந்து ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு ஏற்பட்ட எல்லை மோதலுக்குப் பிறகு, இந்திய யாத்ரீகர்களுக்கான இந்தப் பயணம் 2025ஆம் ஆண்டில்தான் மீண்டும் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது


