நேப்பாள மன்னராட்சி ஆதரவு ஆர்ப்பாட்டம்: வன்முறை குறித்து விசாரணை​

1 mins read
9456e143-ab5e-4af0-9ac0-5ccdfddb3009
வெள்ளிக்கிழமை (மார்ச் 28ஆம் தேதி) நேப்பாளத் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்ற மன்னராட்சி ஆதரவு ஆர்ப்பாட்டம். - படம்: இபிஏ

காத்மாண்டு: நேப்பாளத் தலைநகர் காத்மாண்டுவில் மீண்டும் மன்னராட்சி வேண்டும் என்ற முழக்கத்துடன் வெள்ளிக்கிழமை (மார்ச் 28ஆம் தேதி) நடந்த ஆர்ப்பாட்டத்தில் இருவர் உயிரிழந்தனர், மேலும் 112 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

இதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற வன்முறை குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அந்நாட்டு அமைச்சர் ஒருவர் சனிக்கிழமை (மார்ச் 29ஆம் தேதி) கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் உயிரிழந்த இருவருடன் 77 பாதுகாப்பு அதிகாரிகளும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்லெறிவதில் ஈடுபட்டதுடன் நாடாளுமன்றத்தை நோக்கிச் சென்றதை அடுத்து காவல்துறையினர் பலப்பிரயோகத்தை கையாண்டதாகக்  கூறப்படுகிறது. 

ஆர்ப்பாட்டம் பற்றிக் கருத்துரைத்த காவல்துறை  அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீடுகள், கடைகள், மருத்துவமனை, அரசியல் கட்சி அலுவலகம் ஆகியவற்றை சேதப்படுத்தியதுடன் காவல்துறையைச்  சேர்ந்த ஒருவரிடமிருந்த ஆயுதத்தையும் பறித்ததாக தெரிவித்தனர்.  

“இதுபோன்ற எரியூட்டும் சம்பவம், திருட்டு, அமைதியைக் குலைத்து குழப்பத்தை ஏற்படுத்துவது ஆகியவை பொதுச் சொத்துகளை சேதப்படுத்தும் அப்பட்டமான செயல். இது எதிர்ப்பைத்  தெரிவிக்கும் ஆர்ப்பாட்டமே அல்ல,” என்று தொடர்பு, தகவல் தொழில்நுட்ப அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பிரித்வி சுபா குருங் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார். 

ஆர்ப்பாட்டக்காரர்களில், மன்னராட்சி ஆதரவாளர்கள் உட்பட 105 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்மாண்டு வட்டார தலைமை அதிகாரி விளக்கினார். 

நேப்பாள நாட்டின் 239ஆண்டுகால மன்னராட்சி 2008ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அதற்கு முன்னர் 1996ஆம் ஆண்டிலிருந்து 2006ஆம் ஆண்டுவரை நடைபெற்ற கிளர்ச்சியில்  கிட்டத்தட்ட 17,000 பேர் கொல்லப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்