காத்மாண்டு: மேற்கு நேப்பாளத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் சனிக்கிழமை (ஜூன் 29) தெரிவித்தார்.
காத்மாண்டுவிற்கு மேற்கே 250 கிலோ மீட்டர் (156 மைல்) தொலைவில் உள்ள குல்மி மாவட்டம், மலிகா கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உறங்கிக் கொண்டிருந்தபோது நிலச்சரிவால் மண்ணுக்குள் புதையுண்டனர் என்று தேசிய பேரிடர் மீட்பு மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் டிசான் பட்டராய் தெரிவித்தார்.
“அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன,” என்று பட்டராய், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார். அந்தக் குடும்பத்தில் இரு குழந்தைகள் உள்ளனர்.
அருகிலுள்ள சியாங்ஜா மாவட்டத்தில், ஒரு பெண்ணும் அவரது மூன்று வயது மகளும் நிலச்சரிவில் பலியாகினர். குல்மியின் எல்லையான பாக்லுங் மாவட்டத்தில் ஏற்பட்ட மற்றொரு நிலச்சரிவில் இரண்டு பேர் இறந்தனர்.
ஜூன் நடுப்பகுதியில் பருவமழை தொடங்கியதிலிருந்து நேப்பாளம் முழுவதும் நிலச்சரிவு, வெள்ளம், மின்னல் தாக்கங்களால் குறைந்தது 35 பேர் இறந்துள்ளனர். பொதுவாக பருவமழை செப்டம்பர் நடுப்பகுதி வரை தொடரும்.
பெரும்பாலும் மலைப்பாங்கான நேப்பாளத்தில் மழைக்காலத்தில் நிலச்சரிவு, திடீர் வெள்ளம் ஏற்படுவதும் ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதும் வழக்கமானது.