காத்மாண்டு: இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நேப்பாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட 30,000 மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
அவர்களைப் பாதுகாப்பான வேறு இடங்களில் குடியமர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நேப்பாளப் பேரிடர் தணிப்பு, மேலாண்மை ஆணையத்தைச் சேர்ந்த தரம் ராஜ் உப்ரேதி என்ற அதிகாரி தெரிவித்தார்.
அந்தப் பேரிடரில் 1,451 பேர் உயிரிழந்துவிட்டனர்; 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் உட்பட கிட்டத்தட்ட 5,700 பேரைக் காணவில்லை; 75,000க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்துவிட்டன.
ஆறுகளின் இயல்பான நீர்மட்டத்தைவிட சில இடங்களில் 13 மீட்டருக்கும் அதிக உயரத்தில் நீர் பாயும் பகுதிகள் ‘அபாயமிக்க பகுதிகளாக’ அறிவிக்கப்படும் என்று ‘கியோடோ’ செய்தி ஊடகத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணலின்போது திரு உப்ரேதி கூறினார்.
“எதிர்காலத்திலும் பேரிடர் நிகழ வாய்ப்பிருப்பதை அறிந்துள்ளோம். அதனால், நாங்களே சிக்கலை ஏற்படுத்திக்கொள்ள தயாராக இல்லை,” என்றார் அவர்.
பனிச்சரிவின் இடிபாடுகளால் தரைமட்டமான 12 நீர்மின் திட்டங்களில் சிலவற்றின் சுரங்கப் பாதைகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த தேடல் நடவடிக்கைகள் முடிவுக்கு வரவுள்ளன. தேடும் பணிகள் முடிவுக்கு வருவதாக அறிவித்துவிட்டு, விரைவில் பேரிடருக்குப் பிந்தைய மீட்புப் பணிகளுக்கு மாற அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
“உயிருடன் யாரையும் மீட்பதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு அல்லது வாய்ப்பே இல்லை” என்று திரு உப்ரேதி தெரிவித்தார்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் உடனடி வீட்டு மானியமாக 400,000 நேப்பாள ரூபாயும் (S$3,335) நான்கு உறுப்பினர்கள் வரையிலான குடும்பங்களுக்கு மாதாந்தர வாழ்வாதார உதவியாக 15,000 ரூபாயும் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நான்கு பேருக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு ஒவ்வொரு கூடுதல் உறுப்பினருக்கும் கூடுதலாக 2,000 ரூபாய் வழங்கப்படும்.
முதற்கட்ட மீட்புப் பணிகளுக்கு 4.77 பில்லியன் அமெரிக்க டாலர் (S$6.1 பில்லியன்) தேவைப்படும் என மதிப்பிட்டுள்ள போதிலும் இழப்பீட்டுச் செலவுகளால் இறுதித் தேவை அதைவிட இரட்டிப்பாகலாம் என்று உப்ரேதி கூறினார்.
அதனால், ஜப்பான், சீனா, இந்தியா, பிரிட்டன், உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற தனது பங்காளிகளின் உதவியை நேப்பாளம் எதிர்பார்த்துள்ளது.
