காட்மாண்டு: நேப்பாளத் தலைநகரில் நேர்ந்த பெரும் வெள்ளத்திற்குப் பிறகு காணாமல் போன தங்கள் குடும்ப உறுப்பினர்களைத் தேடி மனம் வெம்பும் பலர், சுவர் ஒன்றில் அவர்களது படங்களை ஒட்டி வருகின்றனர்.
திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அருகில் கிட்டத்தட்ட 25 மீட்டர் நீளமுள்ள சுவரில், ஆகஸ்ட் 26ல் ஏற்பட்ட வெள்ளத்தில் மறைந்தோரின் படங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
சீன-நேப்பாள எல்லையில் உள்ள இமயமலை பனிப்பாறை சரிந்த பேரிடரில், 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அத்துடன், கிட்டத்தட்ட 4,500 பேரைக் காணவில்லை.
நேப்பாளத்தில் காணாமல் போன 4,000 பேரில் கிட்டத்தட்ட 600 வெளிநாட்டவர்களும் அடங்குவர்.
வெள்ளத்தில் காணாமல்போன தம் சகோதரரின் படத்தை 46 வயது பிரகாஷ் சேத்ரி, அந்தச் சுவரில் ஒட்டியுள்ளார். உயிரோடு அவர் இன்னும் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை, திரு பிரகாஷைவிட்டு அகலவில்லை.
சுவரின் உச்சியில், குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள் ஒன்றாகக் காணப்படுகின்றன.
மலைப்பகுதியில் சுற்றுப்பயணிகளை வழிநடத்தும் ஷெர்பா இனத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட இளையர்கள் பலரின் படங்களும் வைக்கப்பட்டுள்ளன.
தாயும் பிள்ளையும் கொண்ட மற்றொரு படம் அங்கு இடம்பெறுகிறது.
58 வயது வாகன ஓட்டுநர் டெபு சப்கோட்டா, கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு திரிசூலி பஜார் நகரில் காணாமல் போன தமது 83 வயது மாமியார், பேத்தி ஆகியோரின் புகைப்படங்களை ஒட்டுவதற்காக அங்கு வந்திருந்தார்.
எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டபோதும் தமது மாமியார் தப்பியோட முடியவில்லை என அவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.
வெள்ளத்தில் அவர்கள் அடித்துச் செல்லப்படுவதைப் பார்த்ததால் அவர்கள் தப்பிப்பிழைத்திருப்பார்கள் என்ற நம்பிக்கையும் தமக்கு இல்லை என்று திரு சப்கோட்டா கூறினார்.
“உயிர் இல்லாவிட்டாலும் உடல்களையாவது கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கையில் நான் இங்கு வந்திருக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
நீர் ஆற்றலுக்கான கட்டுமான தளங்களில் பணிபுரியும் சீன தொழிலாளர்கள் பொறியாளர்கள் ஆகியோரின் புகைப்படங்கள், ரசுவா எல்லைக் கடப்பு வழியாகப் பொருள்களைக் கொண்டு வரும் சீன வியாபாரி ஒருவரின் புகைப்படத்துடன் சேர்த்து ஒட்டப்பட்டுள்ளன.
புனிதக் கைலாய மலைக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட இந்து பக்தர்கள், அமெரிக்க சுற்றுலாப் பயணி ஆகியோரின் படங்களும் இச்சுவரில் வைக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு அருகில், சேற்றிலிருந்து மீட்கப்பட்ட உடல்களின் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சொந்தங்களைப் பறிகொடுத்தவர்கள் அங்கு சரிபார்த்துக் கொள்ள இயலும்.
விழிநீர் மல்க வாட்டத்துடன் வீடு திரும்பினாலும் நீத்தாரை வழியனுப்பும் ஏக்கம் இவர்களது மனத்தில் தொடர்ந்து ஊசலாடுகிறது.


