சீனா, இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த நேப்பாளத்தின் புதிய இளம் அரசு விருப்பம்

சீனா, இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த நேப்பாளத்தின் புதிய இளம் அரசு விருப்பம்

படம்: ராய்ட்டர்ஸ்

16 Jun 2026 - 9:28 pm

2 mins read

பெய்ஜிங்: நேப்பாளத்தில் அண்மையில் பொறுப்பேற்ற புதிய அரசாங்கம், சீனாவின் அதிநவீனத் தொழில்நுட்பத் திறனைப் பயன்படுத்திக் கொள்ளவும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கவும் விரும்புவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் சிஷிர் கனல் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்குத் தமது முதல் அதிகாரத்துவப் பயணத்தை மேற்கொண்டுள்ள அவர், பெய்ஜிங்கில் சீனாவின் உயர்தர அரசதந்திரியான வாங் யீ மற்றும் மூத்த கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரி வாங் ஹுனிங் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது நேப்பாளத்தின் வேளாண்மை, சுகாதாரம், சுற்றுலா, அறிவியல்-தொழில்நுட்பத் துறைகளில் பங்காளித்துவத்தை ஏற்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

கடந்த 35 ஆண்டுகளில் நேப்பாளத்தில் 32 முறை ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் நிலவிய அரசியல் நிலையற்ற தன்மை காரணமாக, சீனாவால் வழங்கப்பட்ட கட்டணமற்ற வர்த்தகச் சலுகைகளை நேப்பாள வர்த்தகர்களால் இதுவரை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை.

இதனால் சீனாவுடன் நேப்பாளத்துக்குப் பெரும் வர்த்தகப் பற்றாக்குறை நிலவுகிறது. இச்சூழலில், தங்களது உள்நாட்டுப் பொருளியலை அதிவேகமாக வளர்ப்பதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என்றும் இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டிலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்க சீன முதலீடுகளை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கனல் குறிப்பிட்டார்.

அதேவேளையில், முன்னாள் ராப் பாடகரான 36 வயது பாலென் ஷா தலைமையிலான நேப்பாளத்தின் இந்தப் புதிய இளம் அரசாங்கம், அனைத்து நாடுகளுடனும் தனித்துவமான முறையில் உறவைப் பேண விரும்புவதாகக் கூறியுள்ளது.

அதற்கேற்ப, தமது நாட்டின் மின்சாரத் தயாரிப்புக்கு இந்தியாவைப் பெரிய ஏற்றுமதிச் சந்தையாக நேப்பாளம் கருதுகிறது. நேப்பாளத்தில் சுற்றுப்பயணத்துறையை மேம்படுத்த சீனாவிலிருந்து வரும் சுற்றுப்பயணிகளை அது அதிகம் நம்பியுள்ளது.

குறிப்புச் சொற்கள்