நச்சுப் பொருள் கண்டறியப்பட்டதால் நெஸ்லே, டெனன் பால்மாவு மீட்பு

நச்சுப் பொருள் கண்டறியப்பட்டதால் நெஸ்லே, டெனன் பால்மாவு மீட்பு

1 mins read
பால்மாவுப் பொருள்கள் மீட்பில் ஏற்பட்ட தாமதத்தால் சர்ச்சை
f95bc6e4-0b80-4216-804d-c5366e9ca6dd
விசாரணையின் தொடக்கத்தில் இருந்தே முழு வெளிப்படைத் தன்மையுடன் ஒத்துழைத்ததாக நெஸ்லே நிறுவனம் தெரிவித்தது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

பாரிஸ்: உலகப் புகழ்பெற்ற நெஸ்லே, டெனன் பால்மாவுத் தயாரிப்பு நிறுவனங்கள் அவற்றின் பொருள்களில் அண்மையில் நச்சு கண்டறியப்பட்டதும் அவற்றை மீட்டுக்கொள்ளும் நடவடிக்கையில் தாமதம் காட்டியதாக பிரான்ஸ், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை (மே 19) குற்றஞ்சாட்டியுள்ளன.

குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவற்றை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான ‘செரியுலைட்’ என்ற நச்சுப்பொருள் பால் மாவில் கலந்திருந்தது குறித்து ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகளுக்குத் தாமதமாகத் தெரிவிக்கப்பட்டதாக ரேடியோ பிரான்ஸ் போன்ற ஊடகங்கள் தெரிவித்தன.

சீனாவின் ‘கேபியோ பையோடெக்’ என்ற நிறுவனத்திடம் பெறப்பட்ட மூலப்பொருளில் அந்த நச்சு கண்டுபிடிக்கப்பட்டது. நெஸ்லே, டெனன், லக்டாலிஸ் போன்ற மழலையர் உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள் அந்த மூலப்பொருளைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

அந்நிறுவனங்களில் தயாரிக்கப்பட்ட பால்மாவு உணவுப் பொருள்கள் தற்போது பல நாடுகளில் மீட்கப்பட்டுவருகின்றன. ஐரோப்பிய நாடுகளில் உள்ள பெற்றோரின் கவலைக்கும் அந்தச் சம்பவம் காரணமாக அமைந்துள்ளது.

ஊடகங்கள் புலன் விசாரணை

ஊடகங்கள் நடத்திய புலன் விசாரணை குறித்துக் கருத்துரைத்த நெஸ்லே நிறுவனப் பேச்சாளர், குற்றச்சாட்டை மறுத்தார். அரசாங்க அதிகாரிகள் நடத்திய விசாரணையின் தொடக்கத்தில் இருந்தே முழு வெளிப்படைத் தன்மையுடன் நெஸ்லே நிறுவனம் ஒத்துழைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

டெனன் நிறுவனத்திடம் இருந்து எவ்விதக் கருத்தும் வெளிவரவில்லை. சென்ற ஆண்டு (2025) டிசம்பர் 24ஆம் தேதி நச்சு கண்டறியப்பட்டு, இவ்வாண்டு ஜனவரி 5ஆம் தேதி முதல் பால்மாவுப் பொருள்கள் ஐரோப்பிய நாடுகளில் மீட்டுக்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்புச் சொற்கள்