அரபுக் கட்சிகள் ஏமாற்றியதாக நெட்டன்யாகு குற்றச்சாட்டு: தேர்தல் ஆணையம் மறுப்பு

அரபுக் கட்சிகள் ஏமாற்றியதாக நெட்டன்யாகு குற்றச்சாட்டு: தேர்தல் ஆணையம் மறுப்பு

கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

04 Nov 2026 - 8:34 pm

2 mins read

ஜெருசலம்: இஸ்ரேலியத் தேர்தலில் அரபுக் கட்சிகள் ஏமாற்றியதாகப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு முன்வைத்த குற்றச்சாட்டுகளை அந்நாட்டின் தேர்தல் ஆணைய அதிகாரிகள் புதன்கிழமை (நவம்பர் 4) மறுத்தனர்.

திரு நெட்டன்யாகுவைப் பதவியிலிருந்து விலக்கும் ஆற்றலை இஸ்ரேலிய அரபுக் கட்சிகள் கொண்டிருக்கலாம். தேர்தலில் வாக்குகள் பல கட்சியினரிடையே சிதறியிருந்ததால் இந்நிலை உருவாகியுள்ளது.

முடிவெடுக்கும் நிலையில் அதிபர்

அக்டோபர் 27ஆம் தேதி நடந்த தேர்தல் முடிவுகள் இஸ்ரேலிய அதிபர் ஐசேக் ஹெல்சோக்கிடம் சிங்கப்பூர் நேரப்படி புதன்கிழமை (நவம்பர் 4) மாலை 6 மணிக்கு அதிகாரபூர்வமாகச் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. முதலில் ஆட்சியமைக்கும் வாய்ப்பை திரு நெட்டன்யாகுவிடம் அளிப்பதா அல்லது அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காடி ஐசன்கொட்டிடம் ஒப்படைப்பதா என்று முடிவெடுப்பதற்கான நடவடிக்கைகளை திரு ஹெர்ஸோக் மேற்கொண்டு வருகிறார்.

தேர்தலில் இருதரப்பும் பெரும்பான்மை வாக்குகளைப் பெறவில்லை.

சோதனைகள்

திரு நெட்டன்யாகு புகார்களை முன்வைத்ததையடுத்து இஸ்ரேலின் மத்திய தேர்தல் குழு 9,069 வாக்குச்சாவடிகளில் தாங்கள் சோதனை நடத்தியதாகத் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து தேர்தல் முடிவுகள் வாக்காளர்களின் விருப்பத்தைச் சரியாகச் சித்திரிப்பதைத் தாங்கள் உணர்வதாக அது குறிப்பிட்டது.

“அரசியல் தரப்புகள் சமர்ப்பித்த எல்லா புகார்களும் பரிசீலிக்கப்பட்டுவிட்டன. தேர்தலில் நம்பகத்தன்மைக்குப் பங்கம் விளைவிக்கும் எந்த அம்சமும் கண்டுபிடிப்புகளில் காணப்படவில்லை,” என்று மத்திய தேர்தல் குழு அறிக்கை மூலம் தெரிவித்தது.

நெட்டன்யாகுவின் தொடர் குற்றச்சாட்டுகள்

பெரும்பான்மை அரபு உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சிகள் ஏமாற்று வேலையில் ஈடுபட்டதாக திரு நெட்டன்யாகு தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். தேர்தல் நாளன்று உறையில் பணம் வைத்திருந்த பலர் கைதானதாக அவர் சுட்டினார். பின்னர் அரசியல்வாதிகள் கத்தாரிடமிருந்து பணம் பெற்றதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இதேபோன்ற குற்றச்சாட்டுகள் முன்பு திரு நெட்டன்யாகுவின் தரப்பினருக்கு எதிராகவும் முன்வைக்கப்பட்டிருந்தன.

திரு நெட்டன்யாகுவின் பங்காளியான, உள்நாட்டுப் பாதுகாப்புச் சேவைத் தலைவர் ‌ஷின் பெட், அரபுக் கட்சிகளிடம் விசாரணை நடத்துமாறு கேட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதுகுறித்து இஸ்ரேலிய தலைமைச் சட்ட அதிகாரி காலி பகாராவ்-மியாரா, ஆதாரம் இல்லாமல் யாரிடம் விசாரிக்கப்போவதில்லை என்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) இரவு கூறினார்.

குறிப்புச் சொற்கள்