வாஷிங்டன்: ஹமாஸ் அமைப்பு வசம் சிக்கியுள்ள பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான உடன்பாட்டை எட்ட இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு போதுமான முயற்சி எடுக்கவில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
ஆனால், இதுகுறித்து அவர் கூடுதல் விவரங்களை வெளியிடவில்லை.
பிணைக்கைதிகள் விடுவிப்பு, போர் நிறுத்த உடன்படிக்கை ஆகியவை தொடர்பாக பேசு்சுவார்த்தையை நடத்துவோரிடம் அமெரிக்கா அதன் இறுதிப் பரிந்துரையை முன்வைக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.
கடந்த வார இறுதியில் காஸாவில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றில் ஆறு பிணைக்கைதிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
மாண்டோரில் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளின் குடியுரிமை பெற்ற 23 வயது ஹெர்ஷ் கோல்டுபர்க் பொலினும் அடங்குவார்.
அந்த ஆறு பிணைக்கைதிகளையும் ஹமாஸ் போராளிகள் கொன்றதாக இஸ்ரேலிய ராணுவம் குற்றம் சாட்டியது.
ஆறு பிணைக்கைதிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, எஞ்சியுள்ள பிணைக்கைதிகளைப் பத்திரமாக மீட்க பிரதமர் நெட்டன்யாகுவுக்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் அதிபர் பைடன் பேசினார்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, அதிபர் பைடனின் இந்தக் கருத்து குறித்து பிரதமர் நெட்டன்யாகுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த பிரதமர் நெட்டன்யாகு, ஹமாஸ் அமைப்புக்குத்தான் நெருக்குதல் தரப்பட வேண்டும் என்றும் இஸ்ரேலுக்கு நெருக்குதல் தரப்படக்கூடாது என்றும் கூறினார்.
“இந்தச் சம்பவத்துக்குப் பிறகு எங்களைக் கடுமையான நடவடிக்கை எடுக்கச் சொல்கிறார்களா அல்லது விட்டுக்கொடுக்க சொல்கிறார்களா? இது ஹமாஸ் அமைப்புக்கு எத்தகைய தகவலைக் கொண்டுபோய் சேர்க்கிறது? பிணைக்கைதிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதும் இஸ்ரேலுக்கு நெருக்குதல் தரப்படுகிறது. மேலும் பல பிணைக்கைதிகளைக் கொல்ல ஹமாஸ் அமைப்புக்கு இது ஊக்குவிப்பாக அமையும்,” என்று பிரதமர் நெட்டன்யாகு கூறினார்.
இதனிடையே, பிரதமர் நெட்டன்யாகுவுடன் பேசத் திட்டமிட்டுள்ளதாக அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.
காஸா போர் குறித்து இருநாட்டுத் தலைவர்களும் இதற்குமுன் பலமுறை கலந்துரையாடி உள்ளனர்.

