இஸ்ரேலியத் தேர்தலில் நெட்டன்யாகு முன்னிலை; அரபுக் கட்சிகள் 19 இடங்களை வென்று சாதனை

இஸ்ரேலியத் தேர்தலில் நெட்டன்யாகு முன்னிலை; அரபுக் கட்சிகள் 19 இடங்களை வென்று சாதனை

படம்: இபிஏ

28 Oct 2026 - 9:07 pm

2 mins read

ஜெருசலம்: இஸ்ரேலியப் பொதுத் தேர்தலில் பெரும்பாலான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்கோட்டைவிட சற்று முன்னிலை பெற்றுள்ளார்.

“நாம் வலிமையான, தேசிய, வலதுசாரி அரசாங்கத்தை அமைக்க வேண்டும். அதுவே செய்யப்பட வேண்டிய காரியம்,” என்று நெட்டன்யாகு புதன்கிழமை (அக்டோபர் 28) அதிகாலை ஆதரவாளர்களிடம் கூறினார்.

இருப்பினும், நெட்டன்யாகுவோ அல்லது ஐசன்கோட்டோ ஆட்சி அமைக்கும் நிலையில் இல்லை. 120 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் நெட்டன்யாகுவின் லிகுட் கட்சி 27 இடங்களைப் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரது கூட்டணிக்கு மொத்தம் 54 உறுப்பினர்களே உள்ளனர். ஆட்சி அமைக்கத் தேவையான 61 இடங்கள் என்ற பெரும்பான்மையைவிட இது குறைவாகும்.

முன்னாள் ராணுவத் தளபதியான ஐசன்கோட் தலைமையிலான கூட்டணிக்கு 47 இடங்களே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பக்கட்ட வாக்குப்பதிவுக்குப் பிந்தையக் கருத்துக்கணிப்புகள், இக்கூட்டணி வெற்றிபெறும் என்று கணித்திருந்த நிலையில், இம்முடிவு அத்தரப்பினருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஆனால், இந்த நிச்சயமற்ற தேர்தலில் உண்மையான வெற்றியாளர்களாக நாட்டின் அரபுக் குடிமக்கள் உருவெடுத்துள்ளனர். அரபுக் கட்சிகள் புதிய நாடாளுமன்றத்தில் 19 இடங்களை வென்று சாதனை படைத்துள்ளன.

இஸ்ரேலின் தேர்தல் முறைப்படி, தனித்து இயங்கும் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைப்பது சாத்தியமில்லை. 61 இடங்கள் என்ற பாதி எல்லையைக் கடக்க மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் கட்சியே ஆட்சியைக் கைப்பற்றும்.

புதன்கிழமை சிங்கப்பூர் நேரம் இரவு 8.30 மணி நிலவரப்படி, ஏறக்குறைய 600,000 அஞ்சல் வாக்குகளும் ராணுவ வீரர்களின் வாக்குகளும் இன்னும் எண்ணப்பட வேண்டியுள்ளதால் இவை தற்காலிக முடிவுகளே ஆகும்.

எனினும், அரை நூற்றாண்டு கால இஸ்ரேலிய அரசியல் வரலாற்றில் 78 விழுக்காட்டு வாக்குப்பதிவு என்பது ஒரு புதிய சாதனையாகும். இதற்கு முந்தைய தேர்தலில் வாக்களிப்பு விகிதம் ஏறத்தாழ 60 விழுக்காடாக இருந்து வந்தது.

வழக்கமாகத் தேர்தல்களைப் புறக்கணித்து வந்த அரபுக் குடிமக்கள், இம்முறை யூதர்களைவிட அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.

அரபு வாக்காளர்கள் இவ்வளவு அசாதாரணமான எண்ணிக்கையில் திரண்டு வந்து வாக்களித்ததற்கு முதன்மைக் காரணம் காஸா விவகாரமோ அல்லது பாலஸ்தீனத்தைத் தனிநாடாக அங்கீகரிப்பதற்கான கோரிக்கையோ அல்ல. மாறாக, நெட்டன்யாகு அரசாங்கத்தின் பாகுபாட்டிற்கு எதிராக அரபுக் குடிமக்களிடம் நிலவிய மனக்கசப்பே இதற்குக் காரணம்.

குறிப்புச் சொற்கள்