நெட்டன்யாகு பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியேற வேண்டும்: ஐசன்கோட் காட்டம்

நெட்டன்யாகு பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியேற வேண்டும்: ஐசன்கோட் காட்டம்

படம்: புளூம்பெர்க்

16 Nov 2026 - 12:35 pm

1 mins read

ஜெருசலம்: பிரதமர் அலுவலகத்தை பெஞ்சமின் நெட்டன்யாகு உடனடியாக காலி செய்ய வேண்டும் என இஸ்ரேலியப் பிரதமர் பதவிக்கான போட்டியாளர் காடி ஐசன்கோட் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 15) கூறினார்.

தேர்தல் தலையீடு தொடர்பில் வெளியான தகவல்களைத் தொடர்ந்து, முன்னாள் இஸ்ரேலிய ராணுவத் தளபதியான அவர் இவ்வாறு சாடினார்.

நெட்டன்யாகுவின் தலைமை அதிகாரி இடோ நோர்டன், தேர்தல் தினத்திற்கு முந்தைய நாள் அரபு-இஸ்ரேலிய ராம் கட்சி உறுப்பினர்கள் குறித்து காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்ததாக சேனல் 12 ஊடகம் செய்தி வெளியிட்டது.

அதன்பேரில் அந்த அரபுக் கட்சியைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டு பின்னர், ஆதாரமற்ற தகவல் எனக் கூறி விடுவிக்கப்பட்டனர்.

அரபுக் கட்சிகள் தேர்தல் மோசடி செய்ததாக நெட்டன்யாகுவும் சாடியிருந்தார்.

அவ்விவகாரம் குறித்து உடனடியாக விசாரணை நடத்த ஐசன்கோட் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே, சேனல் 12 செய்தி பொய்யானது என்றும் நோர்டன் தமது குடிமை கடமையையே ஆற்றினார் என்றும் நெட்டன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், ஐசன்கோட் இஸ்ரேலியர்களிடையே வெறுப்பைத் தூண்டுவதாக லிகுட் கட்சி சாடியுள்ளது. கடந்த அக்டோபர் தேர்தலில் எந்தத் தரப்புக்கும் பெரும்பான்மைக்குத் தேவையான 61 இடங்கள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் அரசாங்கம் அமைப்பதற்காக அழைக்கப்பட்ட ஐசன்கோட்டிற்குத் தங்களது ஆதரவை இரண்டு முக்கிய அரபுக் கட்சிகளும் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ஐக்கிய அரசாங்கத்தில் இணையுமாறு நவம்பர் 14ஆம் தேதி நெட்டன்யாகு விடுத்த அழைப்பை ஐசன்கோட் நிராகரித்தார்.

குறிப்புச் சொற்கள்