தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஸாவில் பிணைக்கைதிகளை விடுவிப்பதில் ஓரளவு முன்னேற்றம்: நெட்டன்யாகு

2 mins read
3138c9c7-aa41-49fa-95a6-c7a114c8891b
பிணைக்கைதிகளை விடுவிக்கும் முயற்சிகளைக் கைவிட மாட்டோம் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உறுதி அளித்துள்ளார். - படம்: இபிஏ

ஜெருசலம்: காஸாவில் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களை விடுவிப்பத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு நாடாளுமன்றத்தில் தெரிவித்து உள்ளார்.

காஸா மீது இஸ்ரேல் படையெடுக்கத் தொடங்கியது முதல் 14 மாதங்களுக்கும் மேல் காஸாவில் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டு உள்ளவர்களை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையைக் குறிப்பிட்டு திங்கட்கிழமை (டிசம்பர் 23) அவர் பேசினார்.

போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதி விடுவிப்பு தொடர்பான உடன்பாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பாலஸ்தீன போராளிக் குழுக்கள் பேசிய ஒருசில நாள்களில் திரு நெட்டன்யாகுவின் கருத்து வெளியாகி உள்ளது.

“நாம் செய்வது அனைத்தையும் வெளியில் சொல்லிவிட முடியாது. பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டு உள்ளோரை விடுவித்து நமது நாட்டுக்குத் திரும்பக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளோம்.

“அவர்களை அனைவரையும் திரும்பி அழைத்து வரும் வரை நமது நடவடிக்கைகள் ஓயாது. அந்த நடவடிக்கையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதைக் கவனத்துடன் குறிப்பிட விரும்புகிறேன்,” என்று அவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தெரிவித்தார்.

பிணைக்கைதிகளின் குடும்பங்களை நினைவில் வைத்திருப்பதாகக் குறிப்பிட்ட திரு நெட்டன்யாகு, அவர்களின் அன்புக்குரியவர்கள் நாட்டுக்கும் அன்புக்குரியவர்கள் என்பதால் அவர்களை திருப்பிக் கொண்டுவரும் முயற்சிகளைக் கைவிடப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

பிணைக்கைதிகள் விடுவிப்பு தொடர்பாக இஸ்ரேலிய அரசாங்கம் மேற்கொண்டு இருக்கும் முயற்சிகளின் நிலவரம் குறித்து அவர்களின் குடும்பத்தினர் கேள்வி எழுப்பி இருந்தனர்.

தமது வலசாரி கூட்டணிப் பங்காளிகளைத் திருப்திப்படுத்த திரு நெட்டன்யாகு போரை முடிவுக்குக் கொண்டுவராமலும் பேச்சுவார்த்தையைத் தொடராமலும் இருப்பதாக அந்தக் குடும்பத்தினர் விமர்சித்து உள்ளனர்.

அப்படிப்பட்ட சூழலில், அந்தக் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக நாடாளுமன்றத்தில் அவர்களைக் குறிப்பிட்டு திரு நெட்டன்யாகு பேசி உள்ளார்.

2023 அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது திடீர்த் தாக்குதல் நடத்தியதன் விளைவாக உருவான போரில் 251 பேர் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். அவர்களில் 96 பேர் இன்னும் காஸாவில் உள்ளனர்.

பிணைக்கைதிகளில் 34 பேர் இறந்துவிட்டதாக ராணுவம் ஏற்கெனவே அறிவித்து இருந்தது.

குறிப்புச் சொற்கள்