தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஸா பேரழிவை லெபனானும் எதிர்நோக்கலாம்: நெட்டன்யாகு மிரட்டல்

2 mins read
efe55faa-7524-47b9-a829-d305e4267c82
லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த புகை. - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

ஜெருசலம்: காஸா சந்தித்தப் பேரழிவை லெபனானும் சந்திக்கக்கூடும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு மிரட்டல் விடுத்துள்ளார்.

ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான தரைவழித் தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்திவரும் நிலையில் திரு நெட்டன்யாகு செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 8) மிரட்டல் விடுத்தார். லெபனானின் தெற்குக் கடற்கரைப் பகுதியில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது.

லெபனானின் கடற்கரைப் பகுதிகளில் இஸ்ரேலிய ராணுவம் கூடுதல் படைகளை நிறுத்தியுள்ளது, அவற்றில் வசிக்கும் மக்களை வீடுகளிலிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

“நீண்டகாலமாகத் தொடரும் போரால் காஸா பேரழிவையும் வேதனையையும் எதிர்நோக்குகிறது. அந்த நிலை லெபனானுக்கு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள உங்களுக்கு வாய்ப்பு தரப்படுகிறது,” என்று திரு நெட்டன்யாகு லெபனான் மக்களிடம் காணொளிவழி நேரடியாகக் கூறினார்.

“லெபனான் மக்களிடம் நான் கூறுவது, இந்தப் போரை நிறுத்த ஹிஸ்புல்லாவிடமிருந்து உங்கள் நாட்டைக் காப்பாற்றுங்கள்,” என்றும் அவர் எடுத்துரைத்தார்.

இஸ்ரேலின் துறைமுக நகரான ஹைஃபா மீது ஏவுகணைகளைப் பாய்ச்சியதாக ஹிஸ்புல்லா முன்னதாகத் தெரிவித்தது. 85 ஏவுகணைகள் லெபனானிலிருந்து இஸ்ரேலை நோக்கிப் பாய்ச்சப்பட்டன என்று இஸ்ரேலிய ராணுவமும் குறிப்பிட்டிருந்தது.

லெபனானில் மக்கள் வசிக்கும் பகுதிகள் மீதான வெடிகுண்டுத் தாக்குதல்கள் தொடர்ந்தால் இஸ்ரேலிய நகரங்கள் மேலும் தாக்குதல்களுக்கு உள்ளாகும் என்று ஹிஸ்புல்லா எச்சரித்திருந்தது.

சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் தேதியன்று ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது எதிர்பாரா விதமாகத் தாக்குதல் நடத்தியது. அதனைத் தொடர்ந்து இஸ்ரேல், காஸா மீது பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஹமாசுக்கு ஆதரவாகக் களமிறங்கிய ஹிஸ்புல்லாவுடனும் இஸ்ரேல் சண்டையில் ஈடுபட்டது.

ஹமாஸ் தாக்குதலுக்கு சுமார் ஓராண்டுக்குப் பிறகு இஸ்ரேல், லெபனானில் தனது ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்புடன் போரிடும் அதேவேளையில், வடக்கே லெபனானுடனான தனது எல்லைப் பகுதியைத் தங்கள்வசம் கொண்டுவரப்போவதாகவும் இஸ்ரேல் உறுதியளித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், புதன்கிழமையன்று திரு நெட்டன்யாகுவுடன் தொலைபேசியில் பேசப்போவதாக ஏக்சியோஸ் (Axios) ஊடகம் செவ்வாய்க்கிழமை இரவு தெரிவித்தது. மூன்று அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏக்சியோஸ் தகவல் வெளியிட்டது.

குறிப்புச் சொற்கள்