தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமைதியை எட்ட இஸ்‌ரேல் 3 நிபந்தனைகள்

2 mins read
f53bfdd6-f333-47fe-bd66-099cf9b06f97
இஸ்‌ரேல், மத்திய காஸாவில் அதன் ஆகாய, தரைவழித் தாக்குதல்களை அதிகரித்துள்ளதாக பாலஸ்தீன ஊடகம் தெரிவித்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஜெருசலம்: ஹமாசுடனான போரில் அமைதி நிலையை எட்ட, இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு மூன்று நிபந்தனைகளைக் கோடிகாட்டியிருக்கிறார்.

ஹமாஸ் குழு அழியவேண்டும், காஸா ராணுவமற்ற பகுதியாக மாற வேண்டும், பாலஸ்தீன சமூகம் கிளர்ச்சிப் போக்கைக் கைவிடவேண்டும் ஆகியவையே அவை. இந்தக் கருத்துகள் டிசம்பர் 25ஆம் தேதி வால் ஸ்திரீட் ஜர்னலில் வெளியிடப்பட்டன.

காஸாவில் தாக்குதல்களைக் குறைக்க இஸ்‌ரேலுக்கு நெருக்குதல்கள் கொடுக்கப்பட்டுவருகின்றன. அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் குழு இஸ்ரேலில் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையே போர் தொடங்கியது. அந்தத் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்.

“ஹமாசை அழிக்கும் விவகாரத்தில், இஸ்‌ரேல் தொடர்ந்து அனைத்துலகச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கும்,” என்று திரு நெட்டன்யாகு அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

போர் தொடங்கியதிலிருந்து 20,000க்கும் மேற்பட்டோர் காஸாவில் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் சுகாதார அமைச்சு கூறியது.

இந்நிலையில், ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான சண்டை தொடரும் என்று திரு நெட்டன்யாகு டிசம்பர் 25ஆம் தேதியன்று சூளுரைத்துள்ளார்.

காஸாவில் இஸ்‌ரேல் ஓர் இரவில் நடத்திய ஆகாயத் தாக்குதல்களில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக காஸா சுகாதார அதிகாரிகள் கூறினர். பாலஸ்தீனர்கள் துக்கம் அனுசரித்துக்கொண்டிருந்த வேளையில், திரு நெட்டன்யாகுவின் அக்கருத்து வந்துள்ளது.

இஸ்ரேலின் அத்தாக்குதல் நடந்த சில மணி நேரத்திற்குப் பிறகு அவர் வட காஸா பகுதியில் உள்ள இஸ்ரேலியப் படைகளைச் சென்று பார்த்தார். இதற்கிடையே காஸாவில் நடத்திவரும் தாக்குதல்களின் தீவிரத்தையும் பொதுமக்களின் மரணங்களையும் குறைக்குமாறு அமெரிக்கா இஸ்ரேலைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இருப்பினும், போர் நிறைவடைவதற்கு இன்னும் அதிக காலம் உள்ளதாகத் திரு நெட்டன்யாகு தமது கட்சி உறுப்பினர்களிடம் கூறினார். தனது அரசாங்கம் சண்டையை நிறுத்தும் என்று கூறப்படும் செய்திகளையும் அவர் நிராகரித்தார்.

ராணுவ நெருக்குதல் இல்லாமல் எஞ்சியிருக்கும் இஸ்ரேலியப் பிணையாளிகளை மீட்கமுடியாது என்று அவர் கூறினார்.

“நாங்கள் நிறுத்தவில்லை. போர் இறுதிவரை தொடரும்,” என்று திரு நெட்டன்யாகு சொன்னார்.

இந்நிலையில், காஸாவின் மாகாஸி பகுதியில் நடத்தப்பட்ட ஆகாயத் தாக்குதலில் கொல்லப்பட்டோரில் பெரும்பாலோர் பெண்களும் குழந்தைகளும் என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் அஷ்ரஃப் அல்-கிட்ரா கூறினார்.

அருகில் உள்ள அல்-புரீஜ், அல்-நுசேராட் பகுதிகளில் இஸ்‌ரேலிய விமானங்களும் பீரங்கிகளும் வீடுகளையும் சாலைகளையும் இடித்ததில் எட்டு பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

தென் காஸாவில் உள்ள கான் யுனிஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய மற்றோர் ஆகாயத் தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ அதிகாரிகள் கூறினார். அதனைத் தொடர்ந்து ஓர் இரவில் உயிர் இழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 100க்கும் அதிகமானது.

குறிப்புச் சொற்கள்
காஸாஇஸ்‌ரேல்