ஜெருசலம்: இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, நவம்பர் 2026 தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அதில் வெற்றி பெறப் போவதாகவும் சனிக்கிழமை (அக்டோபர் 18) அன்று கூறினார்.
வலதுசாரி ஒளிவழியான சேனல் 14ல் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற திரு நெட்டன்யாகுவிடம், நீங்கள் மற்றொரு பதவிக்காலத்தை எதிர்பார்க்க விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் “ஆம்,” என்று பதிலளித்தார்.
நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று எதிர்பார்க்கிறீர்களா என்று கேட்டபோது, அந்த மூத்த தலைவர் “ஆம்” என்று பதிலளித்தார்.
இஸ்ரேலின் முக்கிய வலதுசாரி லிக்குட் கட்சியின் தலைவரான திரு நெட்டன்யாகு, 1996 முதல் தொடர்ச்சியாக 18 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேலின் பிரதமராக நீண்ட காலம் பணியாற்றியவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
கடந்த தேர்தல்களில், அவரது லிக்குட் கட்சி நெசெட்டில் 32 இடங்களையும், அதன் தீவிர யூத சமய ஆதரவாளர்கள் 18 இடங்களையும், சமய சியோனிசம் கூட்டணி 14 இடங்களையும் வென்றது. இது தீவிர வலதுசாரிகளுக்கு ஒரு சாதனையாகும்.
அவரது தற்போதைய பதவிக்காலம் சர்ச்சைக்குரிய நீதித்துறை மறுசீரமைப்பு திட்டத்துடன் தொடங்கியது. இது பல மாதங்களாக பெரிய அளவிலான போராட்டங்களைத் தூண்டியது. பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் கிட்டத்தட்ட நாள்தோறும் வீதிகளில் இறங்கிப் போராடினர்.
காஸாவில் இருந்து அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸின் சற்றும் எதிர்பாராத தாக்குதலால் தூண்டப்பட்ட போர் தொடங்கியதிலிருந்து, திரு. நெட்டன்யாகு போரைக் கையாண்ட விதம் குறித்து பிணைக் கைதிகளின் குடும்பத்தினரிடமிருந்தும் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார் என்று ஏஎஃப் பி செய்தி கூறுகிறது.