சான்பிரான்சிஸ்கோ: நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம், மறுசீரமைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அதன் மொத்த ஊழியர்களில் 5 விழுக்காடு ஆட்குறைப்பு செய்யத் திட்டமிட்டுள்ளது.
பார்வையாளர்களின் ஈடுபாடு குறைந்து வருவது, கடந்த ஓராண்டாகப் பங்குகளின் விலை சரிந்து வருவது உள்ளிட்ட நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆட்குறைப்புக்கான அறிவிப்பு அடுத்த வாரத் தொடக்கத்திலேயே வரக்கூடும் என்று விவரமறிந்த வட்டாரங்கள் பக் நியூஸ் இதழிடம் தெரிவித்துள்ளன.
அக்டோபர் 20ஆம் தேதியன்று அந்நிறுவனம் தனது 3ஆம் காலாண்டு வருவாய் அறிக்கையை வெளியிடுவதற்கு சில நாள்களுக்கு முன்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
நெட்ஃபிலிக்சின் உலகளாவிய ஊழியர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 17,000 என அறியப்படுகிறது.
இருப்பினும், நிறுவனத்தின் சொந்த ஆண்டறிக்கையின்படி 2025ஆம் ஆண்டின் இறுதியில் ஏறக்குறைய 16,000 முழுநேர ஊழியர்கள் இருந்தனர்.
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை தொடர்ந்தால், அது 2022ஆம் ஆண்டிற்குப் பிறகு நெட்ஃபிலிக்ஸ் மேற்கொள்ளும் மிகப்பெரிய ஆட்குறைப்பாக இருக்கும்.
அந்த ஆண்டில், ஒரே காலாண்டில் 200,000 சந்தாதாரர்களை இழந்து பத்து ஆண்டுகள் இல்லாத சரிவை அது சந்தித்தது.
அதனைத் தொடர்ந்து மே மாதத்தில் ஏறக்குறைய 150 ஊழியர்களும், ஜூன் மாதத்தில் ஏறக்குறைய 300 பேரும் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர்.
