நியூயார்க்: ரிஃப்லெக்ஷன் ஏஐ (Reflection AI) என்னும் அமெரிக்க நிறுவனம் சீனத் தொழில்நுட்பங்களுக்குப் போட்டியாக ‘பீம்’ (Beam) என்ற புதிய திறந்தவெளிச் செயற்கை நுண்ணறிவு மாதிரியை வெளியிட்டுள்ளது.
ரிஃப்லெக்ஷன் ஏஐ நிறுவனத்தை கூகல் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுப் பிரிவின் முன்னாள் ஊழியர்கள் தொடங்கினர்.
வர்த்தகம், மென்பொருள் எழுதுவது, ஏஐ முகவர் உள்ளிட்ட பணிகளைச் சிறப்பாகச் செய்யும் வகையில் ‘பீம்’ வடிவமைக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ‘ஜிஎல்எம்-5.2’ என்ற ஏஐ மாதிரிக்கு இணையாகத் துல்லியமான முறையில் செயல்படுவதுடன், குறைந்த செலவிலும் சேவைகளை வழங்குகிறது.
மேலும், இது குறித்த கூடுதல் தொழில்நுட்ப விவரங்கள் அக்டோபரில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்விடியா நிறுவனத்தின் ஆதரவுடன் செயல்படும் இந்த நிறுவனம், ஸ்பேஸ்எக்ஸ், நெபியஸ் போன்ற முன்னணி நிறுவனங்களுடன் முக்கிய ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.
இதன் மூலம், அமெரிக்கத் தொழில்நுட்ப ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும் அமெரிக்கா எடுக்கும் முயற்சிகளுக்கு இது கைகொடுக்கிறது.
ஓப்பன்ஏஐ, ஆந்த்ரோபிக் போன்ற முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்ட அல்லது தனியார் ஏஐ மாதிரிகளையே வழங்கி வரும் நிலையில், ரிஃப்லெக்ஷன் நிறுவனம் திறந்தவெளி ஏஐ மாதிரிகளை உருவாக்குவதில் அதிகக் கவனம் செலுத்துகிறது.
