ஜெருசலத்தில் புதிய அமெரிக்க தூதரக வளாகம்

ஜெருசலத்தில் புதிய அமெரிக்க தூதரக வளாகம்

படம்: ராய்ட்டர்ஸ்

02 Jul 2026 - 2:22 pm

1 mins read

ஜெருசலம்: ஜெருசலத்தில் புதிதாக நிரந்தர அமெரிக்க தூதரக வளாகத்தை அமைப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் கையெழுத்திட்டுள்ளன.

தெற்கு ஜெருசலத்தில் உள்ள ஆலன்பி வளாகத்தில் புதிய தூதரகம் அமையவுள்ளது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையிலான அசைக்க முடியாத பங்காளித்துவத்தைப் பிரதிபலிப்பதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிதியோன் சார் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் தூதரக கட்டுமானத்திற்கு பாலஸ்தீன மனித உரிமை அமைப்பான ‘அதாலா’ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தூதரகம் அமையவுள்ள நிலம், 1950ஆம் ஆண்டில் தப்பியோடியவர்களின் சொத்து சட்டத்தின் கீழ் பாலஸ்தீன உரிமையாளர்களிடமிருந்து இஸ்ரேலால் பறிமுதல் செய்யப்பட்டது என்று அவ்வமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இதன்மூலம், அனைத்துலகச் சட்டங்களை மீறி இஸ்ரேலின் சட்டவிரோத நடவடிக்கைகளை அமெரிக்கா நேரடியாக ஆதரிப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

1967 போருக்குப் பிறகு ஜெருசலத்தைத் தலைநகராக இஸ்ரேல் அறிவித்தாலும், அனைத்துலக சமூகம் அதனை முழுமையாக அங்கீகரிக்கவில்லை. பாலஸ்தீனர்கள் கிழக்கு ஜெருசலத்தைத் தங்களின் எதிர்கால தனி நாட்டின் தலைநகராகக் கருதுகின்றனர்.

கடந்த 2017ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து, தூதரகத்தை அங்கு மாற்ற உத்தரவிட்டார். தகுந்த இடம் கிடைக்கும்வரை தூதரகச் சேவைகள் பல்வேறு இடங்களில் தற்காலிகமாக இயங்கி வந்தன.

வட்டாரப் பதற்றங்களுக்கிடையே,புதிய தூதரக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
இஸ்‌ரேல்அமெரிக்காதூதரகம்திறப்புவிழா