சந்தேகத்திற்குரிய உரையாடல்களைப் பகுப்பாய்வு செய்து அடையாளம் காண்பதன் மூலம், உத்தேச மோசடிகளைக் கண்டறிய பயனர்களுக்கு உதவும் வகையில் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முன்பு புகார் அளிக்கப்படாத எண்களிலிருந்து வரும் உரையாடல்களும் அவற்றில் அடங்கும்.
‘அன்டிஸ்கேம் பங்கோ’ எனும் (AntiScam Pango) அச்செயலி, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அனைத்துச் செய்திகளையும் பகுப்பாய்வு செய்து, உரையாடல்கள் நிகழும்போதே சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளைக் கண்டறிந்து எச்சரிக்கிறது.
‘கவ்டெக்’ எனும் அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பும் ‘கூகல் டீப்மைன்ட்’ (Google DeepMind) நிறுவனமும் இணைந்து அந்தச் செயலியை உருவாக்கியுள்ளன. சாண்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு நிலையத்தில் நடைபெற்ற ‘கவ்டெக்’கின் இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ‘ஸ்டேக் மாநாடு 2026’ல், மனிதவள தற்காலிக அமைச்சர் ஜாஸ்மின் லாவ் புதன்கிழமை (நவம்பர் 4) அதனை அறிமுகப்படுத்தினார்.
தொடக்கமாக, ஆண்ட்ராய்டு பயனர்கள் முதற்கட்டத்தில் இருக்கும் அந்தச் செயலியை கூகல் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
பயனர்கள் தேவையான அனுமதிகளை வழங்கியவுடன், ‘அன்டிஸ்கேம் பங்கோ’ பின்னணியில் இயங்கத் தொடங்கும். ஓர் உரையாடல் சந்தேகத்திற்குரியதாக இருக்கலாம் என்று ‘அன்டிஸ்கேம் பங்கோ’ அடையாளம் காணும்போது, அது ஒரு மோசடியாக இருக்கக்கூடும் என்பதைப் பயனர்களுக்கு விளக்குகிறது.
மோசடிக்காரர்கள் பொதுமக்களை ஏமாற்றித் தங்களை நம்பவைத்து, அவர்களின் பணம் அல்லது தனிப்பட்ட தகவல்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்யும் சமூகப் பொறியியல் உத்திகளைப் பயனர்கள் அடையாளம் காண உதவுவதே இந்த அணுகுமுறையின் நோக்கம்.
