இந்தியா - பூட்டான் எல்லையில் புதிய தானியக்கக் குடிநுழைவு முனையம்

இந்தியா - பூட்டான் எல்லையில் புதிய தானியக்கக் குடிநுழைவு முனையம்

படம்: ஜிஎம்சி/இன்ஸ்டகிராம்

23 Oct 2026 - 7:35 pm

2 mins read

திம்பு: பூட்டானின் புதிய நுழைவாயிலான ‘கெலேபு மைண்ட்ஃபுல்னஸ் சிட்டி’ (ஜிஎம்சி), தனது புதிய குடிநுழைவு முனையத்தைத் திறந்து வைத்துள்ளது.

இது கெலேபுவில் உள்ள பூட்டான் - இந்திய நில எல்லையைப் பயன்படுத்தும் தகுதியுள்ள பூட்டான் மற்றும் இந்தியக் குடிமக்கள் அங்க அடையாளச் சரிபார்ப்பு மூலம் குடிநுழைவுச் சோதனையைக் கடக்க அனுமதிக்கும் தானியங்கி ‘இ-கேட்’கள் அந்த முனையத்தில் அமைந்துள்ளன.

‘ஜிஎம்சி’யின் ஆளுநர் தாஷோ டாக்டர் லோடே ஷெரிங் அந்த முனையத்தைத் திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அவர், “இந்த முனையம் வெறும் கட்டடம் மட்டுமல்ல. பாதுகாப்பை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பதோடு எல்லையைக் கடக்கும் மக்களின் நடமாட்டத்தைச் சிறப்பாகக் கண்காணிக்கவும் இது உதவும்,” என்று கூறினார்.

‘ஜிஎம்சி’ மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், அங்கு நிறுவப்பட்டு வரும் உள்கட்டமைப்பின் ஒரு பகுதியாக இந்த முனையம் அமைகிறது.

இது கெலேபுவிற்கும் இந்தியாவிற்கும் இடையே வந்து செல்லும் மக்களின் அதிகரித்து வரும் எண்ணிக்கைக்கு ஆதரவாக இருக்கும்.

இதற்காக ஒரு சேவைக் கட்டணம் அறிமுகப்படுத்தப்படும் என்றார் ஆளுநர்.

“கட்டணம் அறிமுகப்படுத்துவதை அனைவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை அறிந்துள்ளோம். இருப்பினும், தரமான வசதிகளைப் பராமரிப்பதற்கும் திறமையான சேவைகளை வழங்குவதற்கும் நிதி ஆதாரங்கள் தேவைப்படுகின்றன,” என்று ஆளுநர் கூறினார்.

வட்டார இணைப்பு, நிலையான வளர்ச்சி மற்றும் பொருளியல் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சியில், இந்தியா - பூட்டான் புதிய இணைப்புத் திட்டங்களுக்கு ஆதரவாக இந்தியா ரயில் இணைப்புகளை அமைத்து வருகிறது.

திட்டங்களை விரைவாகச் செயல்படுத்துவதற்காக கோக்ராஜர் - கெலேபு ரயில் பாதை, சிறப்பு ரயில் திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது விரைவான அனுமதியைப் பெறவும் நிலத்தைக் கையகப்படுத்தவும் வழிவகுக்கிறது.

அதேநேரம், பூட்டானின் 13வது ஐந்தாண்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, வெளியுறவு அமைச்சு மூலம் பூட்டானுக்கு இந்திய அரசு நிதியுதவி அளிக்கும்.

இந்த நடைமுறை, உள்கட்டமைப்பின் பெரும்பகுதி இந்தியப் பகுதியில் அமைவதை உறுதி செய்வதோடு, பூட்டானின் வளர்ச்சித் தேவைகளுக்கான முழு ஆதரவையும் நீட்டிக்கிறது.

குறிப்புச் சொற்கள்