தாய்லாந்தில் உள்நாட்டு விமானப் பயணிகளுக்கும் புதிய பயணப்பெட்டிச் சோதனை விதிமுறை

தாய்லாந்தில் உள்நாட்டு விமானப் பயணிகளுக்கும் புதிய பயணப்பெட்டிச் சோதனை விதிமுறை

படம்: ராய்ட்டர்ஸ்

25 Oct 2026 - 9:25 pm

2 mins read

பேங்காக்: தாய்லாந்திலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகளுக்கு மட்டுமன்றி, உள்நாட்டு விமானப் பயணிகளின் பயணப்பெட்டிகளும் இனி புதிய விதிமுறைகளின்கீழ் சோதனைக்கு உட்படுத்தப்படலாம் என்று தாய்லாந்து சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

அக்டோபர் மாதம் 16ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்தப் புதிய பயணப்பெட்டிச் சோதனை விதிமுறையானது, தாய்லாந்திலிருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு மற்றும் அனைத்துலக விமானப் பயணங்களுக்கும் பொருந்தும் என்று ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

அதேவேளையில், பயணிகள் விமானத்தில் ஏறும் அந்தந்த விமான நிலையங்களிலேயே இத்தகைய சோதனைகள் நடத்தப்படுவதால், தாய்லாந்திற்குள் வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு இந்த விதிமுறை பொருந்தாது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டு விமானப் பயணி ஒருவர், தாம் அங்கு இல்லாதபோது தமது பயணப்பெட்டி திறக்கப்பட்டுச் சோதனையிடப்பட்டதாகப் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த அதிகாரபூர்வ விளக்கம் வெளிவந்துள்ளது.

இச்சம்பவத்தை உறுதிசெய்த தாய்லாந்து சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், அந்தப் பயணியின் பயணப்பெட்டியில் மின்கலனால் இயங்கும் மின்னணு சாதனம் ஒன்று இருந்ததை விமான நிலைய அதிகாரிகள் கண்டறிந்ததாகக் கூறியது.

அந்தப் பயணப்பெட்டியில் ‘டிஎஸ்ஏ’ அங்கீகரிக்கப்பட்ட பூட்டு இல்லாத காரணத்தினால், அதிகாரிகள் அதன் ‘ஸிப்’பை வெட்டித் திறந்து சோதனையிட நேரிட்டது என்றும் தெரிவித்தது.

விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகள் பயணப்பெட்டியின் பூட்டை உடைக்காமல் முதன்மைத் திறவுகோல் மூலம் திறந்து, சோதனையிட்டு மீண்டும் பூட்டுவதற்கு ஏதுவாக அமைவதே இந்த ‘டிஎஸ்ஏ’ சிறப்புப் பூட்டுகளாகும். சோதனைக்குப் பிறகு, சோதனை நடத்தப்பட்டதற்கான அறிவிப்புக் குறிப்பு அந்தப் பையில் வைக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இந்தச் சோதனை எப்போது, எங்கு நடைபெற்றது என்பது உள்ளிட்ட கூடுதல் விவரங்களை ஆணையம் வெளியிடவில்லை.

விமானத்தில் ஏற்றுவதற்கு முன்பாகப் பயணப்பெட்டிகளை ஸ்கேன் செய்யும் சோதனையின்போது, பதிவு செய்யப்பட்ட பயணப்பெட்டிகளில் கொண்டுசெல்லத் தடைவிதிக்கப்பட்ட பொருள்கள் இருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்தால், உரிமையாளர் உடனிருக்காமலேயே எந்தவொரு பயணப்பெட்டிகளையும் திறந்து சோதனையிடப் புதிய விதிமுறை விமான நிலைய அதிகாரிகளுக்கு முழு அதிகாரமளிக்கிறது.

எனவே, பயணிகள் தங்களது பயணப்பெட்டிகளை எடுத்து வைக்கும்போது, அவற்றை மூடுவதற்கு முன்னரும் பின்னரும் படம் எடுத்து வைத்துக்கொள்ளுமாறு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. சோதனையின்போது பயணப்பெட்டியில் உள்ள பொருள்கள் ஏதேனும் தொலைந்துபோனாலோ அல்லது சேதமடைந்தாலோ, இந்த படங்களை ஆதாரமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
தாய்லாந்துவிமான நிலையம்பயணப்பெட்டிசோதனை