சீனா, வடகொரியாவை இணைக்கும் புதிய பாலம் விரைவில் திறப்பு

சீனா, வடகொரியாவை இணைக்கும் புதிய பாலம் விரைவில் திறப்பு

1 mins read
f6df4ecc-c0fc-45c9-89e9-467ce321edd3
யாளு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம், சீனாவின் டாண்டாங் நகரையும் வடகொரியாவின் சினுய்ஜூ பகுதியையும் இணைக்கும். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

பெய்ஜிங்: சீனாவையும் வடகொரியாவையும் இணைக்கும் புதிய பாலம் விரைவில் திறக்கப்பட உள்ளது.

வடகொரியாவின் சினுய்ஜூ பகுதியில் சுங்கச் சாவடிக் கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டிருப்பதை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25) ஜப்பானின் ‘கியோடோ செய்தி உறுதிப்படுத்தியுள்ளது.

சீனாவின் டாண்டாங் நகரையும் வடகொரியாவின் சினுய்ஜூ பகுதியையும் இணைக்கும் ‘நியூ யாளு ரிவர்’ பாலம் யாளு ஆற்றின் குறுக்கே கடந்த 2014ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. எனினும், பல்வேறு காரணங்களால் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பாலத்தின் திறப்பு விழா தள்ளிப்போனது.

தற்போது இரு நாடுகளுக்கும் இடையே உயர்மட்ட அதிகாரிகளின் சந்திப்புகள், பயணிகள் ரயில் சேவை ஆகியவை மீண்டும் தொடங்கியுள்ளன. இருதரப்பு உறவு சீரடைந்து வரும் சூழலில், பாலத்தின் திறப்பு விழாவுக்கான ஆயத்தப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. சீனப் பகுதியிலும் புதிய சுங்கக் கட்டடங்களின் பணிகள் நிறைவடைந்துவிட்டன.

இரண்டாவது சீனா-ஜப்பான் போரின்போது கட்டப்பட்ட பழைய பாலத்தில் ஒற்றைச் சாலை மட்டுமே உள்ள நிலையில், புதிய பாலத்தில் இரு வழிகளிலும் தலா இரு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பாலம் திறக்கப்படுவதன் மூலம் சீனா, வடகொரியா இடையிலான வணிகம், மக்கள் பரிமாற்றம் ஆகியவை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்