சிட்னி: மக்கள் பயன்படுத்தும் மளிகைப் பொருள்களுக்கு பேரங்காடிகள் அளவுக்கு அதிகமாக விலை ஏற்றுவதைத் தடுக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் 2026 ஜூலை 1ஆம் தேதி புதிய சட்டத்தை அமல்படுத்த உள்ளது.
பெரிய சில்லறைக் கடைகளின் மிதமிஞ்சிய விலை ஏற்றத்திலிருந்து பொதுமக்களைக் காப்பதற்காக அந்தச் சட்டம் கொண்டு வரப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அந்தச் சட்டம் தொடர்பாக ஆஸ்திரேலிய கருவூலத் துறைக்குப் பொறுப்பான துணை அமைச்சர் ஜிம் சாமரும் போட்டித்தன்மைக்கான துணை அமைச்சர் ஆண்ட்ரு லேயும் விளக்கம் அளித்துள்ளனர்.
பொருள்களைத் தருவிக்க ஆன செலவுக்கும் அவற்றின் மூலம் கிடைக்கும் லாபத்திற்கும் இடைப்பட்ட விலையை, பேரங்காடிகள் அளவுக்கு மீறி ஏற்றுவதை சட்டவிரோதம் என புதிய சட்டம் வகைப்படுத்தும் என்று அவர்கள் கூறினர்.
குடும்பங்கள் வாரந்தோறும் வாங்கும் பொருள்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை இது உறுதிசெய்யும் என்று சனிக்கிழமை (டிசம்பர் 13) பின்னேரத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் அவ்விருவரும் தெரிவித்துள்ளனர்.
சட்டத்தை மீறும் பேரங்காடிகளுக்கு, ஒவ்வொரு சட்டமீறலுக்கும் A$10 மில்லியன் (S$8.6 மில்லியன்) வரை அபராதம் விதிக்க புதிய சட்டம் பரிந்துரைக்கிறது. அல்லது சட்டவிரோத விலை ஏற்றம் மூலம் பேரங்காடிகள் அடைந்த லாபத்தில் மூன்று மடங்கை அபராதமாகச் செலுத்த வேண்டும்.
அந்த லாபத்தைக் கணக்கிட முடியாத சூழலில், பேரங்காடியின் வருடாந்திர வருவாயில் பத்து விழுக்காடு அபராதமாக வசூலிக்கப்படும் என்று அறிக்கையில் விவரிக்கப்பட்டு உள்ளது.
பேரங்காடித் தொழில்துறையில் போட்டித்தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் வலுப்படுத்தத் தேவைப்படும் விரிவான முயற்சிகளின் ஒருபகுதியே புதிய சட்டம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

