ஜகார்த்தாவின் போக்குவரத்து நெரிசலுக்கும் காற்றுத் தூய்மைக்கேட்டுக்கும் தீர்வுகாண புதிய இலகு ரயில் சேவை

2 mins read
11e78013-c4f9-4293-ab86-78b18393fc19
ஜகார்த்தாவின் புதிய இலகு ரயில் சேவையை இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ திங்கட்கிழமை தொடங்கி வைத்தார். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

ஜகார்த்தா: ஜகார்த்தாவின் சுற்றுவட்டார நகரங்களை இணைக்கும் முதல் இலகு ரயில் சேவையை இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ திங்கட்கிழமை தொடங்கி வைத்தார்.

மொத்தம் $2.13 பில்லியன் அமெரிக்க டாலர் (S$2.89 பில்லியன்) செலவில் அமைக்கப்பட்ட இந்த ரயில் சேவை, ஜகார்த்தாவின் தீராத சாலை நெரிசலுக்கும் மோசமடைந்துவரும் காற்றுத் தூய்மைக்கேட்டுக்கும் முதற்கட்டத் தீர்வாக அமையும் என்று அவர் கூறினார்.

ஓட்டுநர் இல்லாத 41.2 கிலோமீட்டர் நீள இலகு ரயில் சேவை, மத்திய ஜகார்த்தாவையும் மேற்கு ஜாவா, பெகாசி, டெபொக் ஆகிய வட்டாரங்களில் உள்ள அதன் துணை நகரங்களையும் இணைக்கிறது.

ஜகார்த்தாவின் சுற்றுவட்டார நகரங்களில் வாழும் மக்கள், வழக்கமாக 41.8 கிலோமீட்டர் நீள பயணிகள் ரயில் சேவையைப் பயன்படுத்துவார்கள். இந்தச் சேவையை ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 1.2 மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர்.

உலகிலேயே காற்றுத் தூய்மைக்கேடு ஆக மோசமாக இருக்கும் நகரங்களில் ஒன்றாக மே மாதத்திலிருந்து ஜகார்த்தா இடம்பெற்று வருகிறது. சுவிஸ் காற்றுத்தரத் தொழில்நுட்ப நிறுவனமான ஐகியூஏர் தொகுத்த பட்டியலின்படி, ஆகஸ்ட் மாதம் ஜகார்த்தா பட்டியலின் உச்சத்தில் இருந்தது.

அளவுக்கதிகமான வாகனப் போக்குவரத்தும் நிலக்கரி பயன்படுத்தும் தொழில்துறைகளுமே காற்றுத் தூய்மைக்கேட்டுக்குக் காரணம் என்று அதிபர் விடோடோ கூறினார். ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வாகனங்கள் ஜகார்த்தாவுக்குள் நுழைவதாகவும் அவர் கூறினார்.

“ஆக மோசமான போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களின் பட்டியலில் ஜகார்த்தா எப்போதுமே முதல் பத்து இடங்களில் இடம்பெற்றிருக்கிறது. ஜகார்த்தாவில் போக்குவரத்து நெரிசலும் தூய்மைக்கேடும் எப்போதும் இருக்கின்றன,” என்றார் அவர்.

பத்து மில்லியன் மக்களுக்குமேல் வாழும் ஜகார்த்தாவில், 16 கிலோமீட்டர் நீள சுரங்க விரைவு ரயில் சேவையும் இருக்கிறது.

நெரிசலான ஜகார்த்தாவுக்குப் பதிலாக நுசந்தாரா என்றழைக்கப்படும் புதிய தலைநகரை போர்னியோ தீவில் கட்டும் பணியை இந்தோனீசியா ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்தப் பணி எப்போது முடிவடையும் என்பது தெரியவில்லை.

குறிப்புச் சொற்கள்