தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய தாக்குதல்: தெற்கு காஸா மக்களை வேறு இடத்துக்கு மாற்ற இஸ்ரேல் ஆயத்தம்

2 mins read
0c883bc4-8db5-4576-9ce9-238146f8a092
காஸாவில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து நியூயார்க் நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்பாவி மக்களை பட்டினி போடாதே என்று அவர்கள் முழக்கமிட்டனர். கொலம்பியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான மஹமட் காலில் தலைமையில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக அங்கு பேரணி நடைபெற்றது. - படம்: ஏஎஃப்பி

ஜெருசலம்: இஸ்ரேல் புதிய தீவிரத் தாக்குதலைத் தொடங்குவதற்கு ஏதுவாக தெற்கு காஸாவில் வசிக்கும் மக்களை வேறு இடத்துக்கு மாற்ற ஆயத்தமாகி வருகிறது.

காஸா மக்களுக்குத் தேவையான முகாம்கள், இதர தங்குமிட உபகரணங்கள் வழங்கப்படும் என்று ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.

தெற்கு வட்டாரத்தில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்படுகின்றனர் என்று அது கூறியது.

வடக்கு காஸா நகரத்தின் மிகப்பெரிய நகர்ப்புற மையத்தைக் கைப்பற்ற புதிய தாக்குதல் தொடங்கப்படும் என்று சில நாள்களுக்கு முன்பு இஸ்ரேல் அறிவித்திருந்தது.

இதனால் அங்குள்ள சுமார் 2.2 மில்லியன் மக்கள் கதி என்னவாகும் என்று அனைத்துலக அமைப்புகள் கவலை தெரிவித்திருந்தன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பேசிய இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, தீவிரத் தாக்குதல் தொடங்குவதற்கு முன்பு காஸா நகரத்திலிருந்து மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்படுவார்கள் என்று கூறியிருந்தார்.

காஸா நகரத்தின் மையப்பகுதி ஹமாஸின் கடைசி கோட்டை என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

தெற்கு காஸாவிற்கு மக்களை மாற்றும் இஸ்ரேலின் திட்டங்கள் குறித்து ஐக்கிய நாட்டு சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கவலை தெரிவித்தார்.

இது, மக்களின் துயரத்தை அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.

ஆனால், தங்குமிடம் ஒரு அவசியமான தேவை என்றும் கூடாரங்கள் மற்றும் பிற தங்குமிட உபகரணங்கள் மீண்டும் காசாவிற்குள் அனுமதிக்கப்படும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது என்றும் ஐ.நா. அமைப்பு கூறியது.

காஸா நகரத் திட்டத்தைக் கைப்பற்றும் நடவடிக்கையை இஸ்ரேலிய ராணுவம் தொடங்கினால் ஏற்கெனவே பயங்கரமான மனிதாபிமான சிரமங்களைச் சந்தித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மேலும் பாதிக்கப்படலாம் என்று ஐநா வியாழக்கிழமை எச்சரித்திருந்தது.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு அந்நாட்டுக்குள்ளும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

காஸாவில் பிணைப் பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்கள் இதனால் கொல்லப்படலாம் என்று இஸ்ரேலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பிணைக்கைதிகளின் உறவினர்களும், குடும்பத்தினரும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் புதிய தாக்குதல்களுக்கான திட்டம் வடிவமைக்கப்பட்டு வருகிறது என்று சனிக்கிழமை அன்று இஸ்ரேலிய தற்காப்பு அமைச்சர் கஸ்ட் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்