கோலாலம்பூர்: நீடித்த நிலைத்தன்மையோடு உள்ளூர் பொருளியல் சூழலைக் கட்டமைத்து மலேசிய மக்களின் வாழ்க்கைச் செலவினத்தைக் குறைக்க புதிய செயல் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் 69ஆம் தேசிய தினக் கொண்டாட்டத்தின் அங்கமாக அது தொடங்கிவைக்கப்பட்டதாக மலேசிய தேசியப் பாரம்பரிய சூழலுக்கான அமைப்பின் தலைவர் அஸ்மி அபு காசிம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
‘இகிகோசிஸ்டம் வாரிசான் நெகாரா’ என்ற பெயரில் அத்திட்டம் சில்லறை வியாபாரம், சுகாதாரம், கல்வி போன்ற அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை உள்ளடக்கியது என்று முன்னாள் காவல்துறை தலைவருமான திரு அஸ்மி விளக்கினார்.
மக்கள்மீது உள்ள அழுத்தத்தைக் குறைத்து, உள்ளூர் பொருளியல் தொடர்புகளை வலுப்படுத்தி, அத்தியாவசியப் பொருள்களும் சேவைகளும் அவர்களுக்குக் கிடைப்பதை மேம்படுத்துவது திட்டத்தின் இலக்கு என்று அவர் தெரிவித்தார்.
தலைநகரில் இயங்கும் புக்கிட் அமான் பாதுகாப்பு, பொது நடத்தைத் துறையின் முன்னாள் இயக்குநராக திரு அஸ்மி பணியாற்றியவர். உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் நிலவும் நிச்சயமற்றத் தன்மை பொருள்களின் விலைகளை உயர்த்தி பொதுமக்களின் வீட்டுச் செலவினத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது என்று அவர் கவலை தெரிவித்தார்.
“நாட்டின் இதர அமைப்புகளுடனும் தனியார் நிறுவனங்களுடனும் இணைந்து அரசாங்கத்துடன் ஒத்துழைத்து வாழ்க்கைச் செலவினத்தைக் கட்டுக்குள் வைப்பதற்கான செயல்பாடுகளில் பங்காற்ற நம் அனைவருக்கும் கடமை உள்ளது,” என்று அவர் தெளிவுபடுத்தினார்.
உலகச் சந்தையில் பொருள்களின் விலையும் விநியோகத் தொடரின் தன்மையும் ஏற்றத்தாழ்வாக அமையும் சூழ்நிலையில் வாழ்க்கைச் செலவினத்தைக் குறைப்பதற்கான தீர்வு அரசாங்கம் வழங்கும் மானியங்களில் மட்டும் கிடையாது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
மலாக்கா மாநிலத்தில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, உள்ளூர் காய்கறி, மளிகைக் கடைகளைக் குறிவைத்து அது செயல்படுத்தப்படும். முக்கியமாகக் கிராமப்புறங்களில் உள்ள கடைகள்மீது அதிக கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.
விநியோகங்களை ஒருங்கிணைத்தல், கிடங்குகளில் உள்ள இருப்புகளை நிர்வகித்தல், செயல்முறைகளில் உதவுதல், சில்லறை வியாபாரத் தொடர்பு வளையங்களை விரிவாக்குதல் போன்ற நடைமுறைகள் திட்டத்தில் உள்ளடங்கும் என்று திரு அஸ்மி கூறினார்.


