பாரிஸ்: பிரான்சில் கடந்த வாரம் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின்போது பல்லாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான நகர்ப்புற வன்முறைகள் வெடித்ததைத் தொடர்ந்து, சனிக்கிழமை (அக்டோபர் 24) நடைபெறும் புதிய போராட்டங்களை எதிர்கொள்ள நாடு முழுவதும் கிட்டத்தட்ட 70,000 காவல்துறையினரைப் பணியில் அமர்த்தியுள்ளது.
பள்ளிகளில் நிலவும் கற்றல் சூழலுக்கு எதிராக உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தொடங்கிய அப்போராட்டம், தொடர்ந்து அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவினங்கள் மீதான பொதுமக்களின் தீவிர அதிருப்தியால் தூண்டப்பட்டு, தற்போது நாடு தழுவிய இயக்கமாக உருவெடுத்துள்ளது.
வன்முறை, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுமாறு சமூக ஊடகங்களில் அழைப்பு விடுக்கப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சர் லோரண்ட் நுனெஸ் எச்சரித்துள்ளார். பாரிசில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, அக்டோபர் 24ஆம் தேதி நாடு முழுவதும் கிட்டத்தட்ட 70,000 பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
அதிபர் இமானுவேல் மேக்ரானுக்குப் பதிலாக அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், பிரான்சுக்கு மிக முக்கியமான காலகட்டத்தில் அந்த ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.
இதற்கிடையே வெளியாகியுள்ள புதிய கருத்துக்கணிப்பு ஒன்று, தீவிர வலதுசாரி வேட்பாளரான மரின் லெ பென் முன்னிலையில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதுடன், அண்மைய நிகழ்வுகள் அவரது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளதையும் காட்டுகிறது.
