பேங்காக்: தாய்லாந்தின் விலங்கியல் தோட்டம் ஒன்று அதன் இரண்டு மாத குட்டி நீர்யானைக்குக் கிடைத்துவரும் புகழைச் சாதகமாக்கிக்கொள்ளும் வகையில் அதன் பெயரில் நினைவுப்பொருள்களையும் உடைகளையும் விற்கத் தொடங்கவுள்ளது.
சோன்பூரி பகுதியிலுள்ள காவ் கியாவ் திறந்தவெளி விலங்கியல் தோட்டம், ‘மூ டெங்’ என்ற அதன் குட்டி நீர்யானை தொடர்பான பொருள்களை விற்கத் திட்டமிட்டுள்ளது.
‘தாய்’ மொழியில் மூ டெங் என்பதற்கு ‘துள்ளும் பன்றி’ என்று பொருளாகும். இந்தக் குட்டி நீர்யானை தற்போது சமூக ஊடங்களில் உள்ளூர்வாசிகளையும் அனைத்துலக மக்களையும் வெகுவாகக் கவர்ந்து வருகிறது.
வார இறுதியில் மட்டும் 10,000க்கும் மேற்பட்டோர் இந்தக் குட்டியைப் பார்ப்பதற்காகவே விலங்கியல் தோட்டத்திற்குத் திரண்டு சென்றுள்ளனர். மூ டெங் தொடர்பான நினைவுப்பொருள்கள் வேண்டும் என்று மக்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கத் தாங்கள் பொருள்களைத் தயாரித்து வரும் வாரத்தில் விற்கவுள்ளதாக விலங்கியல் தோட்டம் தெரிவித்துள்ளது.

